தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷமான நடிகர்களில் ஒருவர்தான் சியான் விக்ரம். நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நடிப்புக்காக தனது உடலை வருத்திக்கொள்ளும் சிறந்த கலைஞராக அவர் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் துணை நடிகராக, டப்பிங் கலைஞராக இருந்த விக்ரமை சேது படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாலா தான்.
பிறகுதான் சியான் விக்ரமின் சினிமா பயணம் வெற்றிப் பாதையில் பயணிக்க துவங்கியது. தொடர்ந்து இராவணன் அந்நியன் சாமி காசி ஐ தில் தூள் போன்ற படங்களில் நடித்து சியான் முன்னணி ஹீரோவாக மாறினார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார். அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க வந்த பிறகும் இப்போதும் நடிகர் விக்ரம் ஹீரோவாக பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான படம் தங்கலான். இந்த படம் கமர்ஷியலாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய தோல்வியை பெற்றது என்றாலும் நடிப்பை பொருத்த வரை விக்ரம் பாராட்டப்பட்டார். அதே போல் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 பாகங்களிலும் விக்ரம் நடிப்பு பலத்த வரவேற்பை பெற்றது.
அதே போல் சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கிய வீரதீர சூரன் 2 படமும் விக்ரமுக்கு பெரிய வெற்றியை தரவில்லை. இந்த படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தின் இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சியான் விக்ரம் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதையில் விக்ரமுக்கு திருப்தி இல்லாததால் அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை.
இயக்குனர் மடோனா அஸ்வின், கதை திரைக்கதையில் பலமுறை திருத்தமும் மாற்றமும் செய்து கதை சொல்லியும், நடிகர் விக்ரம் பிடிக்கவில்லை என்று மறுத்துவிட்டதால், அந்த படம் டிராப் ஆகி விட்டது. அந்த படத்தில் இருந்து இயக்குனர் மடோனா அஸ்வின் விலகி விட்டார். இதையடுத்து இப்போது இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த 71வது தேசிய விருதுகள் அறிவிப்பில் 3 தேசிய விருதுகளை வென்ற படம் பார்க்கிங். இந்த படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் அடுத்த படத்தில்தான் சியான் விக்ரம் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதையை கேட்டவுடன் விக்ரம் ஓகே சொல்லிவிட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.





