தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக உள்ளார். இப்போது இயக்குனராக விஷால் அறிமுகமாகி உள்ள படம் மகுடம். இந்த படத்தில் ஹீரோவாக விஷால் 3 வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் அஞ்சலி துஷாரா விஜயன் ஜான்விஜய் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
சென்னையில் நேற்று மகுடம் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற படத்தின் இயக்குனர் நடிகர் விஷால் பேசியதாவது, எந்த பிரச்சனை வந்தாலும் ஸ்மைல் பண்ணுங்க. எனக்கு அது பழக்கமாகி விட்டது. ஆகஸ்ட் 14ம் தேதி மகுடம் படம் ரிலீஸ் ஆகிறது.
உங்களிடம் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்குது. அது படம் வெற்றி பெற்ற பிறகு ஆகஸ்ட் 16ம் தேதிக்கு பிறகு பேசுகிறேன். இந்த படம் கிளைமாக்ஸ்சில் வழக்கம் போல விஷால் வருவான் அடிப்பான் என்பது மாதிரி இருக்காது. எந்த திரைப்படத்திலும் பார்க்காத ஒரு கிளைமாக்ஸ் பார்க்க போறீங்க.
எனக்கு பிடித்த நடிகர் விஜய். அவர் இன்றைக்கு நல்லா இருக்கிறார். ஒரு ரசிகராக நான் எப்படி ரோகிணி தியேட்டரில் அவர் படத்தை பார்த்து ரசித்தேனோ அதே தியேட்டரில் என் படக்காட்சிக்கு எப்படி ரசிகர்கள் கைதட்ட போறாங்கன்னு பார்க்க ஆவலாக உள்ளேன்.
இந்த படத்தில் ஒரு மிகப்பெரிய தூணாக இருந்தது இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார்தான். அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. ஈகோ இல்லாத ஒரு இசையமைப்பாளர். ராம்கோபால் வர்மாவின் உதயம் சிவா போன்ற படங்களை பார்த்து தான் இயக்குனராக நினைத்தேன். சினிமா என்று இல்லை. முயற்சி செய்து உழைத்தால் எந்த துறையாக இருந்தாலும் ஜெயிக்கலாம்.
நிறைய பெற்றோர் பிள்ளைகளிடம் சினிமா வேண்டாம் என்று சொல்லுவாங்க. ஆனா என்னுடைய அம்மா எனக்கு ஆதரவாக இருந்தார். முக்கியமாக சண்டக்கோழி படத்தில் நான் நடிக்க காரணமே அவர்தான். என் அப்பா அம்மா தந்த நம்பிக்கை தான் 35 வருஷம் கழித்து என் கனவு நனவாகி இயக்குனர் ஆகி உள்ளேன் என்று நடிகர் விஷால் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





