ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை எடுத்தார். தனது சகோதரி மகன் பவன் மற்றும் பிரியா வாரியர் மேத்யூ தாமஸ் அனாமிகா ஆகியோரை வைத்து அவர் இந்த திரைப்படத்தை உருவாக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை.
இதன் நடுவே அவர் அடுத்ததாக குபேரா என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இதனை இயக்கியுள்ளார். நாகர்ஜுனா ராஷ்மிகா உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் இருக்க, தனுஷ் பிச்சைக்காரன் கெட்டப்பில் வந்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
அனேகமாக இந்த திரைப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று பேசிக்கொள்கிறார்கள். இதன் நடுவே அவர் இட்லி கடை திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். தனது சொந்த மாவட்டமான தேனியில் இந்த திரைப்படத்தை படமாக்கி இருக்கிறார் தனுஷ். Dawn பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
ராஜ்கிரண் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார். நித்யா மேனன் கதாநாயகியாக வருகிறார். வில்லனாக அருண் விஜய் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இரண்டு காலகட்டங்களில் இந்த திரைப்படத்தின் கதை நகரும் என்று சிலர் கூறுகிறார்கள். ஹோட்டலை மையமாக வைத்து கதை இருக்கும் என்று பேசப்படுகிறது.
அதேசமயம் அருண் விஜய் குத்துச்சண்டை வீரராக படத்தில் வருகிறார். அவருக்கு உதவியாளராக தனுஷ் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது. இதனால் இட்லி கடை படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதே சஸ்பென்ஸ் ஆக உள்ளது. வரும் பத்தாம் தேதி இந்த திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு இன்னும் 10 சதவீதம் மீதம் இருப்பதால், அந்த முடிவிலிருந்து படக்குழு பின்வாங்கி இருக்கிறது. இதனிடையே அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ரெட்டை தல படத்தில், தனுஷ் ஒரு பாடலை பாடி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இட்லி கடை திரைப்படத்தில் அருண் விஜய் இருக்க, இப்போது அவர் படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடி இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.





