- Advertisement -
Homeபொழுதுபோக்குகைதி 2க்கு முன்பாகவே சூப்பர் ஸ்டார் - உலகநாயகனை வைத்து படம் எடுக்கிறாரா லோகேஷ் கனகராஜ்......

கைதி 2க்கு முன்பாகவே சூப்பர் ஸ்டார் – உலகநாயகனை வைத்து படம் எடுக்கிறாரா லோகேஷ் கனகராஜ்… இந்திய திரை உலகமே திரும்பிப் பார்க்கும் தகவல்…

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் அண்மையில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் நாகர்ஜூனா, அமீர்கான் சோபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகப் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்தை பார்த்த பலரும் லோகேஷ் கனகராஜை வறுத்தெடுத்தார்கள்.

எதற்கு இப்படி லாஜிக்கே இல்லாமல் ஒரு திரைக்கதையை அவர் அமைத்திருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினர். இருப்பினும் படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ஒரு இன்ச் உயரம் தூக்கி கொடுக்கும் வகையில் அனிருத்தின் இசை அமைத்திருந்தது. அதுமட்டுமல்ல, வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் சாதனை படைத்திருக்கிறது.

கூலி திரைப்படம் வெளியான வெறும் நான்கே நாட்களில் 404 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜெயிலர் திரைப்படம் 650 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த நிலையில், அந்த சாதனையை கூலி திரைப்படம் முறியடித்து விடும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

கூலி திரைப்படத்தின் சூட்டிங் முடிந்த கையோடு, ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதன் பெரும்பாலான படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றது. தற்போது இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்புகளே மீதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜும் அடுத்ததாக கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் தீவிரம் காட்டி வருவதாக பேச்சு எழுந்தது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் லோகேஷ் அதன் பிறகு, இந்த ஆண்டு இறுதியில் கைதி 2 படத்தில் கவனம் செலுத்துவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீர் திருப்பமாக, லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை சேர்த்து வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூலி திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை வைத்து இந்த கதையை லோகேஷ் கனகராஜ் கூறி விட்டதாகவும் இருவருக்கும் அது பிடித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. கேங்ஸ்டர் பாணியில் இந்த கதை எடுக்கப்பட இருப்பதாக சொல்கிறார்கள். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க முன் வந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மட்டும் நடந்தால் அரங்கம் அதிருமே என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் இணையத்தில் பேசி வருகின்றனர்.

சற்று முன்