தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த 21ம் தேதி மதுரையில் உள்ள பாரபத்தியில் 2வது மாநில அரசியல் மாநாடு நடந்தது. லட்சக்கணக்கான மக்கள் திரண்ட இந்த மாநாட்டில் பங்கேற்ற நடிகர் விஜய், திமுக குறித்தும் பாஜக குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்து பேசினார். குறிப்பாக திமுகவை அரசியல் எதிரி என்றும் பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறினார்.
மேலும் திமுக ஆட்சியை அகற்றி விட்டு வரும் 2026ம் ஆண்டில் தவெக ஆட்சியமைக்கும். 234 தொகுதிகளிலும் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவரும் நானும் வேறில்லை. நான்தான் 234 தொகுதிகளுக்கும் ஒரே வேட்பாளர் என்றும் நடிகர் விஜய் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
எந்த அரசியல் கட்சியுடனும் தேர்தல் கூட்டணி இல்லை என்பதை வெளிப்படையாக இந்த மாநாட்டில் தெரிவித்த நடிகர் விஜய், அடிமை கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. திமுக பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றியது போல, பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டது போல கபட நாடகம் வேறு இல்லை என்றும் குறிப்பிட்டு பேசினார்.
இந்த மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவரான முக ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என்று குறிப்பிட்டு பேசினார். வாட் அங்கிள் திஸ் ஈஸ் வெரி ராங்க் அங்கிள் என்றும் அவர் கிண்டலடித்தார். கேக்குதா அங்கிள், மக்கள் சொல்வது கேட்குதா அங்கிள் என்றும் ஸ்டாலினை இந்த மாநாட்டில் பேசிய நடிகர் விஜய் கலாய்த்து தள்ளிவிட்டார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய விமர்சனத்தை சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அரசியல் களத்தில் தளபதியார் என்று அழைக்கப்படும் ஸ்டாலின், சமீபத்தில் மக்கள் பலரும் என்னை அப்பா என்று அழைப்பதாகவும் கூறியிருந்தார். அந்த டிரண்டிங்கை அடித்து நொறுக்கி சுக்குநூறாக்கும் விதமாக அங்கிள் அங்கிள் என்று விஜய், ஸ்டாலினை அழைத்து வைரலாக்கி விட்டார் என்று பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தற்போது மதுரையில் பல இடங்களில் நடிகர் விஜயை கண்டித்து திமுகவினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில் வாட் பிரதர் ஓவர் பிரதர் கொஞ்சம் அடங்கி வாசிங்க பிரதர் என்று நடிகர் விஜயின் கார்டூன் புகைப்படத்துடன் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





