தமிழ் திரையுலகில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், 1990களில் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வந்தார். குறிப்பாக விஜயின் ஆரம்ப கட்ட திரையுலக பயணத்தில் அவருக்கு ஜோடியாக சந்திரலேகா என்னும் திரைப்படத்தில் வனிதா நடித்தார்.
அந்தத் திரைப்படம் பெரியளவு வெற்றி பெறவில்லை என்றாலும் அதில் இடம்பெற்ற அல்லாஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் பாடல் ஹிட் அடித்தது. தொடர்ந்து, மாணிக்கம் என்னும் திரைப்படத்திலும் கதாநாயகியாக வந்தார் வனிதா விஜயகுமார்.
பிறகு 2000 ஆண்டு நடிகர் ஆகாஷை வனிதா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால் இருவருக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, 2005 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதில் வனிதாவின் மகன், தனது தந்தை மற்றும் தாத்தாவிடம் வளர்ந்தார்.
பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து 2007 ஆம் ஆண்டு, தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை கரம் பிடித்தார் வனிதா. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இந்த உறவும் நீண்ட காலம் நிலைக்கவில்லை. அவர்களுக்குள் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தம்பதியர் பிரிந்தனர்.
இதன் பிறகு தனியாகவே இருந்து வந்த வனிதா விஜயகுமார், சில காலம் கழித்து டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர்களுக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். இதன் பிறகு குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்த வனிதா, 2020ல் கொரோனா சமயத்தின் போது பீட்டர் பால் என்பவரை கரம் பிடித்தார்.
ஆனால் அதே வருடமே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. திருமணமான வேகத்தில் இருவரும் பிரிந்த சூழலில், சில மாதம் கழித்து பீட்டர் பால் உடல் நலக்குறைவால் காலமானார். இந்த சூழலில் தான் தற்போது நான்காவது முறையாக திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார் வனிதா விஜயகுமார். ராபர்ட் உடன் அவர் ஏற்கனவே திருமணம் ஆகாமல் வசித்து வந்த சூழலில், மீண்டும் அவரைத்தான் கல்யாணம் பண்ண முடிவெடுத்துள்ளார். இருவரும் தங்கள் சிக்கல்களை பேசி தீர்த்துக் கொண்டதால், திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. வரும் ஐந்தாம் தேதி இவர்களுக்கு கல்யாணம் நடைபெற உள்ளது.





