விஜய் சேதுபதிக்கு கடந்தாண்டு வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம் விஜய் சேதுபதிக்கு 50ஆவது திரைப்படமாக களமிறங்கியது. நான் லீனியர் கதை அம்சத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்ததால், பலரும் மகாராஜாவை கொண்டாடினார்கள்.
ஒட்டுமொத்தமாக 100 கோடி ரூபாய் வசூலை தாண்டிய இந்த திரைப்படம், தமிழ்நாட்டைக் கடந்து பிற மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டது. இதன்பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் நாம் முதலில் பார்க்கப் போவது ஏஸ் திரைப்படம்.
ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் என்னும் திரைப்படத்தை இயக்கிய ஆறுமுக குமார்தான் இதனையும் எடுத்திருந்தார். அந்தத் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தாலும், ஏஸ் கலவையான விமர்சனத்தையே பெற்றது. மலேசியாவை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் யோகி பாபுவின் காமெடி நன்றாக இருப்பதாக பலரும் கூறியிருந்தார்கள்.
ஆனால் படத்திற்கு சரியான ப்ரொமோஷன் இல்லாததால், வந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. இந்த நிலையில் அடுத்ததாக பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. நித்யா மேனன் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கணவன் மனைவி உறவை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதால், படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், படம் ரிலீஸ் ஆனதும் நினைத்த அளவு எதிர்பார்ப்பை அது பூர்த்தி செய்யவில்லை. முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், இரண்டாம் பாதி சுத்தமாக எடுபடவில்லை என்றும் பலரும் கூறினர். இருப்பினும், வார இறுதி நாட்களில் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக தலைவன் தலைவிக்கு படை எடுத்தனர்.
இதன் காரணமாக அந்த திரைப்படம் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி இருக்கும் தலைவன் தலைவி திரைப்படம், இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறது. அதேசமயம் அந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது தெரிவித்துள்ளது.





