மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால் கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். இப்போதும் அவர் படங்கள் வெளியாகும் போது அவர் ஒரு வசூல் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்து வருகிறார். அதே நேரத்தில் பலமுறை தன்னை மலையாள நடிகர் சங்கம் ( அம்மா) தலைவர் பதவி தேடி வந்த போது வேண்டாம் என்று மறுத்தவர்தான் மோகன்லால் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் தனது நண்பரும் அம்மா சங்க முன்னாள் தலைவருமான காமெடி நடிகர் இன்னசென்ட் மறைவுக்குப் பிறகு நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்க நடிகர் மோகன்லால் சம்மதித்தார். ஆனாலும் அவர் அம்மா சங்கத்தில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான ஹேமா கமிஷன் அறிக்கையால் ஏற்பட்ட பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்தது.
அம்மா சங்க நிர்வாகிகள் சிலர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளால் விவகாரம் பெரிதானது. நடிகர் மோகன்லால் மிகவும் நெருக்கடிக்கு ஆளானார். இதையடுத்து அவர் தார்மீக பொறுப்பு ஏற்று தனது தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். அவருடன் சங்க நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
தற்போது அம்மா சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு அதில் நடிகை ஸ்வேதா மேனன் தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார். முதல் முறையாக மலையாள நடிகர் சங்கத்திற்கு பெண் ஒருவர் தலைவராகி இருக்கிறார். இதற்கிடையே நடிகர் மோகன்லால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம்தான் காரணம். அதில் அவரை சிக்க வைத்தனர் என்பது போன்று தேர்தல் சமயத்தில் பல உறுப்பினர்கள் பேசியிருந்தார்கள். சமீபத்தில் இதுகுறித்து நடிகர் மோகன்லால் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நடிகர் மோகன்லால் கூறியதாவது, நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கு எந்த ஒரு நிர்பந்தமும் காரணம் இல்லை. நான் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டேன். திடீரென நாங்கள் பலருக்கும் எதிரிகளைப் போல மாறிவிட்டோம். ஆனால் இந்த விமர்சனங்கள் காரணமாக நான் ராஜினாமா முடிவை எடுக்கவில்லை. இந்த சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இதுதான் சரியான நேரம் என்றுதான் ராஜினாமா செய்தேன். இதை நான் ஒரு தோல்வியாக பார்க்கவில்லை.
ஒரு காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு தலைமை மாறுகின்ற ஒரு இயற்கையான நடைமுறையாக தான் பார்க்கிறேன். புதிதாக பெண் ஒருவர் தலைமை பொறுப்பு ஏற்று இருப்பது நடிகர் சங்கத்திற்குள் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கும் என்று நம்புகிறேன். அதுமட்டுமின்றி நடிகர் சங்கத்துடன் முரண்பட்டு வெளியே சென்ற உறுப்பினர்கள் மீண்டும் சங்கத்துக்கு திரும்புவது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று நடிகர் மோகன்லால் கூறியிருக்கிறார்.





