தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர் மணிகண்டன். எந்த கேரக்டர் என்றாலும் அல்வா சாப்பிடுவதை போல மிக லாவகமாக, அழகாக தந்து ரசிகர்களை அசத்தி விடுகிறார். காலா ஜெய்பீம் குட்நைட் லவ்வர் படங்களை தொடர்ந்து, மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் படம் இன்று ரிலீஸாகி உள்ளது.
நடிகர் மணிகண்டன் நடிப்பில் மட்டுமின்றி, ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் இருக்கிறார். பல படங்களில் ஸ்கிரிப்ட் ரைட்டராக பணி செய்திருக்கிறார். பல படங்களில் உதவி இயக்குனராக பணிசெய்திருக்கிறார். நடிக்க வருவதற்கு முன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக தமிழ் தெலுங்கு படங்களுக்கு பின்னணி குரல் பேசியிருக்கிறார். டப்பிங் ரைட்டராகவும் இருந்திருக்கிறார்.
ஒரு படம் நல்ல வரவேற்பை பெற்றாலே அந்த நடிகருக்கு பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் குவியும். ஜெய்பீம் குட்நைட் படங்களின் வெற்றிக்கு பிறகு பல பட வாய்ப்புகள் வந்த போதும், அதில் தனக்கு பிடித்தமான தன்னால் நல்ல நடிப்பை தரக்கூடிய படங்களை மட்டுமே மணிகண்டன் தேர்வு செய்கிறார். அதனால்தான் லவ்வர் குடும்பஸ்தன் என ஓரிரு படங்களில் அவர் நடிக்கிறார்.
வணிக நோக்கத்துக்கான ஒரு கலைஞனாக இல்லாமல் தனது சினிமா நடிப்பு பயணத்தின் அஸ்திவாரம் முதல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக கமர்ஷியல் ஹீரோவாக தன்னை மாற்றிக்கொள்ளாமல், ரசிகர்கள் விரும்பும் ஒரு நல்ல கலைஞனாக அவர் கதைகளை தேர்வு செய்வது பாராட்டக்கூடிய விஷயமாக உள்ளது. ரஜினி கமல் கூட இன்னும் கமர்ஷியல் நாயகர்களாக தான் இருக்க விரும்புகின்றனர்.
உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிகண்டனுக்கு நீண்ட காலமாகவே இயக்குனராக வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் அதிகமாக உள்ளது. அதனால் விரைவில் ஒரு படத்தை இயக்க அவர் தயாராகி விட்டார். இதற்காக நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து கதை சொல்லி இருக்கிறார். கதை கேட்ட அவரும் பிடித்துப் போய் உடனே ஓகே சொல்லி இருக்கிறார்.
காதலும் கடந்து போகும் என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ரௌடி கேரக்டரில் நடித்திருப்பார். அவருடன் பல காட்சிகளில் மணிகண்டனும் நடித்திருந்தார். அந்த வகையில் விஜய் சேதுபதிக்கும், மணிகண்டனுக்கும் நல்ல நட்பு உள்ளது. அந்த வகையில் தனது படத்தில் முதல் நாயகனாக விஜய் சேதுபதியை இயக்க ஆசைப்பட்டுள்ளார் மணிகண்டன். அவரும் சம்மதித்த நிலையில் விரைவில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.





