தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொணடு மக்களை நேரடியாக சந்திக்கிறார். வருகிற 13ம் தேதி சனிக்கிழமை அவர் தனது சுற்றுப்பயணத்தை திருச்சியில் துவங்குகிறார். வருகிற டிசம்பர் மாதம் 20ம் தேதி மதுரையில் தனது மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறார்.
ஏறக்குறைய 4 மாதங்கள் இந்த மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தவெக கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி நடிகர் விஜய் மாவட்டம் வாரியாக நேரில் சென்று மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை நேரடியாக கேட்க இருக்கிறார். அவர்கள் தரும் மனுக்களை பெற்றுக் கொள்கிறார். தனது கட்சி குறித்தும் கொள்கைகள் குறித்தும் மக்கள் மத்தியில் பேச இருக்கிறார்.
ஆனால் நடிகர் விஜய் வரும் 13ம் தேதி துவங்கி வருகிற டிசம்பர் மாதம் 20ம் தேதி வரை மேற்கொள்ளும் இந்த சுற்றுப்பயணத்தில் சனிக்கிழமைகளில் மட்டுமே மட்டுமே மக்களை சந்திக்கிறார். மற்ற நாட்களில் அவர் சுற்றுப்பயணம் செய்வதில்லை. கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு என கொங்கு பகுதிகளில் மட்டுமே அவர் அக்டோபர் 4 மற்றம் 5ம் தேதிகள் என 2 நாட்கள் சனி, ஞாயிறு என சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
விஜய் 2026 என்ற பெயரில்தான் இந்த சுற்றுப்பயணத்தை நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். அதில் சனிக்கிழமை மட்டுமே மக்களை சந்திக்கிறார். அதிலும் சில நாட்களில் 3 மாவட்டங்கள் சில நாட்களில் 2 மாவட்டங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 3 மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் அவர் பேசுவார் என்பதும் எப்படி அனைத்து தரப்பு மக்களையும் அவர் ஒரே நாளில் சந்திக்க முடியும் என்பது கேள்வியாக உள்ளது.
இதற்கிடையே வாரம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களது வேலை, தொழில் பாதிக்கப்படும். போக்குவரத்து நெரிசல் சிரமங்கள் ஏற்படும் என்பதால் தான் வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை மட்டுமே தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
ஆனால் நடிகர் விஜய் தினமும் ஒரே மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவது இல்லை. ஒரு நாளில் 3 மாவட்டம் 2 மாவட்டம் என்றால் அதில் எப்படி தொழில் வணிகம் வியாபாரம் பாதிப்பு ஏற்படும் என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமின்றி ஒரு நாளில் 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் என்றால் மாவட்டத்துக்கு ஒரு இடத்தில்தான் மக்களை சந்திப்பாரா, அல்லது வேனில் போகிற போக்கில் மக்களை பார்த்து கையை மட்டும் அசைத்துவிட்டு செல்வாரா என்பதும் பலருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது.





