தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கடந்த 13ம் தேதி முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மாவட்டம் வாரியாக மேற்கொண்டு வருகிறார். வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மாவட்டம் வாரியாக மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ளும் நடிகர் விஜய் மக்களை நேரில் சந்தித்து பேசுகிறார். வரும் டிசம்பர் 20ம் தேதி வரை இந்த மக்கள் சந்திப்பு பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 13ம் தேதி திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பயணம் செய்து மக்களை சந்தித்த நடிகர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் வழியாக காரில் நாகை வந்தடைந்தார். இன்று மதியம் 2 மணியளவில் நாகையில் உள்ள புத்தூர் அண்ணா சிலை அருகில் மக்களை சந்திப்பு பயணத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் நடிகர் விஜய் பேசினார்.
அப்போது நடிகர் விஜய் பேசியதாவது, அண்ணாவுக்கும் பெரியாருக்கும் வணக்கம். நாகூர் ஆண்டவர் அன்புடன் நெல்லுக்கடை மாரியம்மன் வேளாங்கண்ணி ஆசியோடு கடல் தாய் மடியில் இருக்கும் என் மனதுக்கு நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறேன். என்றைக்கும் மீனவர்களின் நண்பனான விஜயின் அன்பு வணக்கங்கள்.
மீன்பிடித் தொழில், விவசாயம் என உழைக்கும் மக்கள் ஊர் நாகப்பட்டினம். மத வேறுபாடின்றி அனைவருக்கும் பிடித்துப்போன மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் உங்கள் அனைவருக்கும் சிறப்பான வணக்கங்கள். தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் 2வது இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் துறைமுகம். ஆனால் இங்கே மீன் பதப்படுத்தும் நவீன தொழிற்சாலைகள் இல்லை. அதிக குடிசைகள் நிறைந்த பகுதியும் நாகப்பட்டினம்தான்.
இங்கு முன்னேற்றத்திற்கு எங்கள் ஆட்சிதான் சாட்சி என்று அடுக்கு மொழியில் தேர்தல் நேரத்தில் பேசி பேசி அதை நான் கேட்டு கேட்டு நம் காதில் ரத்தம் வந்தது தான் மிச்சம். இவர்கள் ஆண்டது பத்தாதா? நம் மக்கள் தவிப்பது பத்தாதா? நான் கடந்த வாரம் சனிக்கிழமை திருச்சி அரியலூர் மாவட்டங்களில் மக்களை சந்தித்தேன். ஆனால் திட்டமிட்டப்படி பெரம்பலூர் மாவட்டம் செல்ல முடியவில்லை. அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பெரம்பலூர் மாவட்டத்துக்கு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்.
இந்த மக்கள் சந்திப்பு பிளான் போட்ட பின்னர் சனிக்கிழமை மட்டுமே ஏன் மக்களை சந்திக்கிறார் என்கிறார்கள். உங்களை அனைவரையும் நான் பார்க்க வரும்போது உங்களது வேலைக்கு எந்த விதமான தொந்தரவும் இருந்துவிடக் கூடாது. உங்களது வேலை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதனாலேயே வாரத்தின் இறுதி நாளில் உங்களை ஓய்வு நாளில் சந்திக்கிறேன். அதேபோல் அரசியலில் சில பேருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் ஓய்வு நாளில் பிரச்சாரம் செய்கிறேன் என்று நடிகர் விஜய் நாகையில் பேசியிருக்கிறார்.





