கடந்த 2022ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் காந்தாரா. கன்னடத்தில் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்ற இந்த படம் தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது.
நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தை இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ. 400 கோடிக்கு மேல் அதிகமான வசூலை வாரிக் குவித்தது. இதைத்தொடர்ந்து காந்தாரா படத்தின் 2ம் பாகமாக காந்தாரா சாப்டர் 1 படம் உருவாகி உள்ளது. ஆனால் இந்த படம் காந்தாரா படத்தின் முந்தைய காலகட்டத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது.
காந்தாரா சாப்டர் 1 படத்தில் கதாநாயகனாக மீண்டும் ரிஷப்ஷெட்டி நடித்திருக்கிறார். அவரே டைரக்ட் செய்திருக்கிறார். ருக்மணி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று வெளியாக உள்ளது. 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த படம் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் காந்தாரா சாப்டர் 1 படத்தின் தியேட்டர் வெளியீடு உரிமம் வியாபாரம் ரூ. 33 கோடிக்கு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் காந்தாரா சாப்டர் 1 படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
காந்தாராவின் முதல் பாகம் மற்றும் கேஜிஎஃப் 2 சலார் ஆகிய படங்களை தயாரிக்க ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம்தான் காந்தாரா சாப்டர் 1 படத்தையும் மிக பிரமாண்டமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 3 நிமிடங்கள் வரை ஓடும் காந்தராா சாப்டர் 1 ட்ரெய்லர் மிக அற்புதமாகவும் அதே நேரத்தில் ஆக்சன் கதைக்களத்தில் மிரட்டலாகவும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
ஈஸ்வர கடவுள் இங்கே வந்தாரா என்ற கேள்விக்கு இங்கே வந்தது மட்டுமல்ல, இங்கேயே நிலைச்சு இருந்து விட்டார் போன்ற வசனங்கள் இது கடவுளின் கதை என்பதை தெளிவுபடுத்துகிறது. கொத்தடிமை மக்களை கொல்லும் ராஜா கதையில் அவர்களை கடவுளே அவதாரம் எடுத்து வந்து மீட்பதுதான் கதை என்று டிரெய்லர் வெளிப்புடுத்துகிறது. நிச்சயமாக காந்தாரா படம் போலவே காந்தாரா சாப்டர் 1 படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று ரசிகர்கள் இப்போதே கூறுகின்றனர்.





