இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் நடித்து வருகிறார் நடிகர் அஜீத்குமார். படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், ஐதராபாத்தில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் செய்யப்படுகிறது. அதனால் இறுதிக்கட்ட சண்டைக்காட்சியில் அஜீத்குமார் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். ஏற்கனவே திரிஷா கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா, ஜி ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். விடாமுயற்சி, திரிஷா அஜீத்குமாருடன் இணைந்து நடித்துள்ள 5வது படமாகும்.
இந்த படத்தை தொடர்ந்து அஜீத்குமார் நடித்து வரும் படம் குட்பேட் அக்லி. மார்க் ஆண்டனி என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கும் இப்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
காலை முதல் பிற்பகல் 3 மணி வரை விடாமுயற்சி படப்பிடிப்பிலும், அதைத்தொடர்ந்து மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை குட்பேட் அக்லி படப்பிடிப்பிலும் நடிகர் அஜீத்குமார் பங்கேற்று வருகிறார். இதனால் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.
இதற்கிடையே குட்பேட் அக்லி படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தான் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் முன்பு அடிபட்டது. ஆனால் இப்போது இதில் வேறு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஸ்ரீலீலாவும் நடிக்கிறார். ஆனால் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடிக்கப் போவது திரிஷா தான் என்கின்றனர்.
அதாவது விடாமுயற்சி படத்திலும் திரிஷா தான் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதே போல் திரிஷாதான் இந்த படத்திலும் ஜோடியாக நடிக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. திரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அவரது இயக்கத்தில் திரிஷாவே நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்ரீலீலா நடிப்பாரா, இரட்டை ஹீரோயின் சப்ஜெக்ட்டா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.





