தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் ஆர் சுந்தர்ராஜன். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அந்த காலகட்டத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் நடிகர் விஜயகாந்த். ஆனால் ஆர் சுந்தர்ராஜன் இயக்கிய வைதேகி காத்திருந்தாள் படம் நடிகர் விஜயகாந்தை சகல தரப்பினரும் விரும்பும் ஒரு கதாநாயகனாக மாற்றியது. அதேபோல் அம்மன் கோவில் கிழக்காலே படமும் விஜயகாந்துக்கு மிகப்பெரிய செல்வாக்கை ரசிகர்களிடம் பெற்று தந்தது.
ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜயகாந்த் அல்ல. அம்மன் கோவில் கிழக்காலே படத்தின் கதையை இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் நடிகர் ரஜினிக்காக தான் எழுதினார். அப்போது உச்ச நடிகராக இருந்தவர் நடிகர் ரஜினிகாந்த். அதனால் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்கி விட்டால் முன்னணி இயக்குனராக மாறிவிடலாம் என்பதால் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் ரஜினிகாந்தை மையப்படுத்தி படத்தின் கதையை எழுதியிருந்தார்.
ஆனால் கதையை கேட்ட ரஜினிகாந்த், எனக்கு மியூசிக் சப்ஜெக்ட் எல்லாம் சரிப்பட்டு வராது. அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த சப்ஜெக்ட் எழுதிட்டு வாங்க என்று இயக்குனரிடம் கூறிவிட்டார். அப்போது பூவிலங்கு படத்தில் அறிமுகமான நடிகர் முரளி இளம் ஹீரோவாக வரவேற்பு பெற்றிருந்தார். அவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்த இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் பெங்களூருவுக்கு சென்று முரளியின் அப்பாவை சந்தித்து கதை சொன்னார்.
அப்போது அவர், பாலச்சந்தர் படம் என்பதால் பூவிலங்கு படத்தில் என் மகன் நடிக்க சம்மதித்தேன். அவன் கன்னடத்தில் அறிமுகமாகி இருக்க வேண்டும். இப்போது அவன் நடித்துக் கொண்டிருக்கும் கன்னட படம் முடியட்டும். பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டார். இதனால் முரளியும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என்பதை புரிந்து கொண்ட இயக்குனர் சுந்தர்ராஜன் ஒரு அதிரடி முடிவுக்கு வந்தார்.
அப்போது வைதேகி காத்திருந்தாள் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால் மீண்டும் விஜயகாந்தையே இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்தார். அதனால் அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் நடிகர் விஜயகாந்த் ஹீரோவாக நடித்தார். இந்த படம் பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்ட ஒரு வெற்றிப்படமாக இருந்தது.
அதுவரை பலமுறை விஜயகாந்துடன் நடிக்க மறுத்த நடிகை ராதா, வைதேகி காத்திருந்தாள் பட வெற்றியால் அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடிக்க சம்மதித்தார். இளையராஜாவின் பாடல்கள் படத்திற்கு பெரிய அளவில் கை கொடுத்தது. அம்மன் கோவில் கிழக்காலே படமும் மிகப்பெரிய வெற்றியை வசூலை பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகுதான் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் ராஜாதி ராஜா என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





