தளபதி விஜய் தற்போது அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தை, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி அடைய செய்வதே தனது இலக்கு என்று அவர் கூறி வருகிறார். ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் அவர், தேர்தலுக்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
இப்படி அரசியலில் அவர் அதீத கவனம் செலுத்திய வருவதால் தனது திரையுலக பயணத்தையும், நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார். இதில் அவரின் 68 வது மற்றும் கடைசி திரைப்படமாக உருவாகிறது ஜனநாயகன். அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய மூன்று திரைப்படங்களை எடுத்த ஹெச் வினோத் தான் இதனை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகிறார்கள். சென்னையை அடுத்த பையனூரில் இதற்கான செட் போடப்பட்டு, காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. வரும் பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் அதற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், ரசிகர்கள் ஒரு கணம் வருத்தத்திலும் இருக்கிறார்கள். இது இப்படி இருக்க, விஜயின் ஹிட் திரைப்படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன. ஏற்கனவே கடந்த ஆண்டு அவரது கில்லி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்த திரைப்படம், சக்கை போடு போட்டது. கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில் தான் மீண்டும் விஜய் திரைப்படம் களமிறங்குகிறது. இதில் விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படம், வரும் 21 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. முக்கியமான திரையரங்குகளில் இது வெளியாகும் என்று சொல்கிறார்கள்.
இதேபோல், விஜய் நடித்திருக்கும் சச்சின் திரைப்படமும், ஏப்ரல் மாதம் மறு வெளியீடு செய்யப்படுகிறது. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இப்போதும் பலருக்கும் பேவரைட் ஆக உள்ளது. இதில் ஜெனிலியா கதாநாயகியாக நடித்திருந்தார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தார். நாளை இந்த திரைப்படத்தின் ரீ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுகிறது.





