இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஒரு படத்தில் பாடுவது போன்ற ஒரு பாடல் காட்சி வரும். அதற்கு சிறந்த உதாரணமே மக்கள் திலகம் எம்ஜிஆர். அவர் மறைந்து 37 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இப்போதும் சினிமாவிலும் அரசியலிலும் எம்ஜிஆர் என்ற பெயர் மந்திர சொல்லாக உச்சரிக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் அரசியல் கட்சி துவங்கி மக்களை சந்தித்து வரும் நடிகர் விஜயும் எம்ஜிஆர் அண்ணா புகைப்படங்களை வைத்துதான் அரசியல் பேசுகிறார். ஆனால் எம்ஜிஆரின் பெயரை சொன்னால் மக்கள் மத்தியில் கிடைக்கும் புகழை மட்டுமே எதிர்பார்க்காமல் எம்ஜிஆர் காட்டிய வழிகளை கொள்கைகளையும் விஜய் போன்றவர்கள் கடைபிடித்தால் பின்பற்றினால் நாட்டுக்கும் நல்லது அவரது கட்சிக்கும் நல்லதாக இருக்கும்.
கடந்த வாரம் சனிக்கிழமை கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் 18 பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 10 ஆயிரம் மட்டுமே இந்த கூட்டத்துக்கு வருவார்கள் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் வந்த கூட்டம் 27 ஆயிரம் பேர் என்று இப்போது போலீஸ் நடத்திய விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு நடிகனை நேரில் பார்க்கும் ஆர்வம் பாமர மக்கள் மட்டுமின்றி படித்தவர்களிடையேயும் காணப்படுவது இயல்பு. விஜயை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டது பெரிய தவறாக யாரும் கூறவில்லை. அதே நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் நெரிசலை குறைக்கவும் மக்களை பாதுகாக்கவும் திமுக ஆட்சியாளர்களும், தவெக கட்சிக்காரர்களும் குறிப்பாக நடிகர் விஜய் உட்பட பலரும் அலட்சியம் காட்டிவிட்டனர் என்பதே கசப்பான உண்மை.
நடிகர் விஜய்க்கே இப்படி கூட்டம் வருகிறது என்றால் கடந்த 1970 – 80களில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பங்கேற்க அதிமுக பிரசார கூட்டங்களில் எத்தனை மடங்கு கூட்டம் கூடியிருக்கும். மறைந்தும் இன்றும் மங்காத புகழுடன் வாழும் அந்த தலைவருக்கு அந்த காலத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரளும் போது அவர் ஒரு தாரக மந்திரத்தை கையில் எடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்தி இருக்கிறார். அசம்பாவிதங்களை தடுத்தும் தவிர்த்தும் மக்களை பாதுகாத்து காப்பாற்றி இருக்கிறார். அவர்தான் உண்மையான மக்களின் தலைவர்.
அதிமுக பிரசார கூட்டங்களில் எம்ஜிஆர் பேசிய பின்பு கூட்டம் முடிந்ததும், முதலில் பெண்களும் குழந்தைகளும் வெளியேறட்டும். ஆண்கள் அப்படியே அந்த இடத்தில் நிற்க வேண்டும். உங்களுக்கு ஒரு தகவல் இருக்கிறது என்று எம்ஜிஆர் மைக்கில் சொல்வார். பெண்களும் குழந்தைகளும் மொத்தமாக வெளியேறியதும், உங்களிடம் சொல்வதற்கு எதுவும் இல்லை. பெண்களும் குழந்தைகளும் நெரிசலில் சிக்காமல் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக தான் அப்படி சொன்னேன் என்று சிரித்தபடி சொல்லிவிட்டு கூட்டத்தை கலைந்து போகச் சொல்வார். இப்படி பல்வேறு யுக்திகளை நுணுக்கமான தந்திரத்தை எம்ஜிஆர் கையாண்டதால் அவரது கூட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்கப்பட்டது.





