தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு என சில பில்டப் விஷயங்களை தொடர்ந்து ஹீரோக்கள் செய்து வருகின்றனர். அதாவது கதாநாயகன் அறிமுகம் காட்சிக்கு முன்பாகவே அவரை பற்றி சிலர் பெருமை பேசுவார்கள், பில்டப் செய்வார்கள், ஊரில் அவரை விட நல்ல மனிதரே யாரும் இல்லை என்பது போன்ற ஒரு சில வசனங்களும் வரும். அதன்பிறகு ஹீரோ என்ட்ரி கொடுப்பார்.
ரஜினி பெரும்பாலான படங்களில் முதல் பாடல் காட்சியில்தான் அறிமுகமாவார். எம்ஜிஆரும் அதை பல படங்களில் கடைபிடித்து இருக்கிறார். அதன்பிறகு சண்டைக்காட்சிகளில் ரஜினி அறிமுகமாவதும் பல படங்களில் டிரண்டிங் ஆக இருந்தது. கதாநாயகனை சாதாரணமாக காட்டுவது மலையாள படங்களில் மட்டுமே யதார்த்தமாக இருக்கும்.
ஒரு படம் துவங்கிய 5 முதல் 10 நிமிடங்களில் கதாநாயகனை திரையில் காட்டி விட்டால்தான், அது ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டம். ஆனால் இப்போதெல்லாம் அந்த டிரண்டிங் கொஞ்சம் மாறி வருகிறது. குறிப்பாக விக்ரம் படத்தில், கமல் படத்தில் பல காட்சிகளுக்கு பிறகுதான் முக்கிய கேரக்டராக காட்டப்படுவார். அதனால் படம் பார்த்த கமல் ரசிகர்கள், கமலையே காணோமே என புலம்பும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இப்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் அதுபோன்ற ஒரு சிச்சுவேஷனில்தான் கமல் வருகிறார் என்று தெரிய வந்துள்ளது. அதாவது இந்தியன் 2 படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை மற்ற நடிகர்களின் காட்சிகளே வரும். அவர்கள் எல்லாம் இந்தியன் தாத்தா குறித்து பேசுவார்கள், ஆச்சரியப்படுவார்கள். பில்டப்பு செய்வார்கள். இடைவேளைக்கு சற்று முன்பாக தான் இந்தியன் தாத்தா திரையில் தோன்றி அறிமுகமாகிறார்.
அதன் பிறகு படம் முடியும் வரை கமலின் நடிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் கிளைமாக்ஸில் இந்த இந்தியன் தாத்தா யார் என்ற பிளாஸ்பேக் வருகிறது. அப்போதுதான் இந்தியன் படத்தின் கதை சொல்லப்படுகிறது. அதை இந்தியன் 3 படத்தின் பிரமோ காட்சிகளாக காட்டப்படுகிறது. அந்த காட்சிகளே இந்தியன் 3 படத்தை பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்களுக்கு தூண்டும் விதமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதனால் கமல்ஹாசனின் முழு நடிப்பும், ஆளுமையும் வெளிப்படுத்தக்கூடிய படமாக இந்தியன் 3 படம்தான் இருக்கும். இந்தியன் 2 படத்தை பொறுத்த வரை அதற்கு முன்னோட்டமாக ரசிகர்களுக்கு இந்த படம் இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஆக, இந்தியன் , இந்தியன் 3 படங்களுக்கு இணைப்பு பாலமாக மட்டுமே இந்தியன் 2 இருக்கப் போகிறது. அதாவது முதல், மூன்றாவது படங்களுக்கு மத்தியில் கமர்ஷியல் ஹிட்டுக்காக இந்தியன் 2 படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.





