இன்று உலகத் தாய்மொழித் திருநாள் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னையர் தினம் மகளிர் தினம் காதலர் தினம் நண்பர்கள் தினம் என்பது போல இன்று தாய்மொழியை கொண்டாடும் ஒரு நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நம் தாய்மொழி தமிழை இன்று மட்டுமல்ல எப்போதுமே நாம் கொண்டாட வேண்டும்.
ஏனென்றால் உலகப் பொதுமறை எனப்படும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை தந்தது தம் தமிழ் மொழிதான் என்ற பெருமை தமிழனாக பிறந்த நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இன்றும் உலக நாடுகளில் பலரும் நம் தமிழை கொண்டாடுகின்றனர். அதன் தொன்மையை உணர்ந்து பாராட்டி சிலாகிக்கின்றனர்.
அந்த வகையில் இன்று உலக தாய்மொழித் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து 7 முறை தேசிய விருது வென்ற கவிப்பேரரசு என அழைக்கப்படும் கவிஞர் வைரமுத்து இன்று ஒரு பதிவை செய்திருக்கிறார். இவர் தண்ணீர் தேசம் கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் சமீபத்தில் வள்ளுவர் மறை வைரமுத்து உரை என பல தமிழ் நூல்களை எழுதியிருக்கிறார்.
கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கவிதை நடையில் கூறியிருப்பதாவது, இன்று உலகத் தாய்மொழித் திருநாள். மொழி என்பது ஒலிக்கருவி அல்ல; உயிரி ஏன் காக்க வேண்டும் மொழியை? அது காலம் சேமிக்கப்பட்ட கலம். மரபு – வரலாறு மருத்துவம் – பண்பாடு கலை – இலக்கியம் விழுமியம் – பெருமிதம் முதலானவற்றைத் தலைமுறைகளுக்குக் கடத்தும் ஆவண வாகனம்.
ஒரு மொழி வாழ்வது அது பேசப்படுவதால் தான். ஒரு மொழி பேசும் கடைசி மனிதனின் குழியில் மொழியும் சேர்த்தே புதைக்கப்படுகிறது. தமிழர்கள் நிறையப் பிள்ளை பெறுங்கள் அருள்கூர்ந்து தாய்மொழியில் பேசுங்கள்; எழுதுங்கள் தயவுசெய்து தாய்மொழியில் திட்டுங்கள். தனித்தமிழில் உரையாடுகிறவனை விசித்திர விலங்காய்ப் பார்க்காதீர்கள்; அவன்தான் மொழியின் கடவுக் கடவுள்.
அதிகார மையங்களில் புழங்காமல், அரசியலின் கதகதப்பு இல்லாமல், தாய்மொழி வழிக்கல்வி தழைக்காமல், அறிவியல் கருவிகளை ஆளாமல் தழைக்காது தாய்மொழி ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் இது அச்சடித்த எச்சரிக்கை தாய்மொழி புழங்குக; தாய்மொழி வழங்குக; எவ்வினத்திலும் தாய்மொழியே விளங்குக என்று அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.





