கடந்த பல ஆண்டுகளாக நடிகர் விஷாலுக்கு பெரிய வெற்றிப் படங்கள் எதுவுமில்லை. கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி என்ற படம் நடிகர் விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது. ஆனால் இந்த படத்தின் அபார வெற்றிக்கு காரணம் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாவும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் விஷால் நடித்தார். இந்த படமும் வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த படம் மதகஜ ராஜா. 12 ஆண்டுகளுக்கு முன்பு 2013ம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பல காரணங்களால் திரைக்கு வராமல் முடங்கி கிடந்தது.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு மதகஜ ராஜா படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. 50 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலை அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் சுந்தர் சி விஷால் கூட்டணி இணைய இருந்தது. ஆனால் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இயக்குனர் சுந்தர் சி பிஸியான நிலையில், விஷாலும் மகுடம் படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டார்.
அதன்பிறகு கார்த்தி நடிக்கும் ஒரு புதிய படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்த படத்தை தயாரிப்பதாக இருந்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பின்வாங்கி விட்டதால் அந்த படம் டிராப் ஆகி விட்டது. எனினும் கால்ஷீட்டை விரயம் செய்ய விரும்பாத இயக்குனர் சுந்தர் சி உடனடியாக விஷாலை வைத்து அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார்.
விஷால் நடிக்கும் புதிய படத்தை சுந்தர் சி இயக்குவது முடிவாகி விட்டது. வருகிற நவம்பரில் படப்பிடிப்பை துவங்கி 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் 4 மாதங்களில் படத்தை முடிக்க முடிவு செய்திருக்கின்றனர். இந்த படத்துக்கு நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைக்க உள்ளார். மதகஜ ராஜா படத்துக்கு இசையமைத்தவர் அவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் இந்த படத்தில் 2 நாயகிகள் நடிக்க உள்ளனர். அதில் ஒருவர் டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த கயாடு லோஹர் இந்த படத்தில் ஒரு நாயகியாக நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நாயகியை தெலுங்கு சினிமாவில் இருந்து கொண்டுவர முடிவு செய்து சில தெலுங்கு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.





