“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 68 ஆவது திரைப்படத்தில் வெங்கட் பிரபுவுடன் கைக்கோர்க்கவுள்ளார். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். வெகு காலம் கழித்து யுவன் ஷங்கர் ராஜா விஜய் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

“தளபதி 68” திரைப்படத்தில் முதலில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அதன் பின் நயன்தாரா இல்லை, ஜோதிகாதான் கதாநாயகி என்று கூறி வந்தனர். எனினும் இத்திரைப்படத்தின் கதாநாயகி குறித்தான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
அதே போல் “லியோ” திரைப்படம் வெளியாகும் வரை “தளபதி 68” திரைப்படத்தை குறித்த எந்த ஒரு தகவலையும் வெளியிடக்கூடாது என்று விஜய் கண்டிஷன் போட்டுவிட்டாராம். இவ்வாறு ஒரு செய்தி இணையத்தில் வலம் வந்தது.

“தளபதி 68” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் “தளபதி 68” திரைப்படம், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே சிக்கலில் சிக்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. “தளபதி 68” திரைப்படத்திற்கு எதிராக ஒரு பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கவுள்ளார்களாம்.
அதாவது “தளபதி 68” திரைப்படத்திற்காக விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவரும் நிலையில் இத்திரைப்படமும் அதிக பட்ஜெட்டுடன் படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு அதிக பட்ஜெட்டில் படமாக்கப்படும்போது தியேட்டரில் டிக்கெட் கட்டணமும் அதிகமாக நிர்ணயிக்கிறார்களாம். ஆதலால் இத்திரைப்படத்திற்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்தமாட்டோம் என்று இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று ஒரு சிலர் பொதுநல வழக்கு போடப்போகிறார்களாம். இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.





