தமிழ் சினிமாவில் இசைஞானியாக வலம் வருபவர் இளையராஜா. கடந்த மாதம் 13ம் தேதி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் இசைஞானி இளையராஜாவின் சொந்த தம்பி கங்கை அமரனும் தனது குடும்பத்துடன் கலந்துக்கொண்டார்.
இளையராஜாவை போலவே கங்கை அமரனும் இசையமைப்பாளர்தான். மேலும் அவர் திரைப்பட இயக்குனராகவும் பாடகராகவும் உள்ளார். இளையராஜா தனது இசைக்கு காப்புரிமை கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நடந்து வரும் நிலையில் அண்ணன் இளையராஜாவுக்கு ஆதரவாக கங்கை அமரன் தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று திருத்தணி முருகன் கோவிலுக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய கோவில் நிர்வாகிகள், சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க முடியாது என்று திருப்பியனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதேவேளையில் உண்மையில் திருத்தணி முருகன் கோவிலில் நடந்த சம்பவம் என்ன என்பது குறித்தும் தெரிய வந்துள்ளது. இசையமைப்பாளர் கங்கை அமரன் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பின் சில நிர்வாகிகளுடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய இன்று வந்துள்ளார். அப்போது கோவிலுக்குள் அனுமதி இன்றி விஎச்பி தரப்பில் விசேஷ பூஜை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது கோவில் அதிகாரிகள் அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்தினர். முறையான முன் அனுமதி பெறாமல் கோவில் வளாகத்திற்குள் பூஜை செய்ய முயற்சித்துதான் இந்த தடைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கங்கை அமரன் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அங்கிருந்தவர்களிடம் பேசிய கங்கை அமரன், என்னை உள்ளே விடலேன்னா என்ன, முருகன் என் உள்ளத்தில் இருக்கிறார். என் கூடவே இருக்கிறார் என்று பேசியிருக்கிறார். கோவில்கள் ஆன்மீக தலங்களாக மட்டுமின்றி கடும் விதிமுறைகளையும் பாரம்பரிய கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து வருகின்றன. அந்த விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படுவதுதான் வழக்கம். சமீப காலமாக அரசியல் கட்சி அல்லது வெவ்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் கோவில்களில் விசேஷ பூஜை நடத்த முயற்சிக்கும்போது முறையான அனுமதி பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





