நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம். இந்த படம் சுருக்கமான தி கோட் என அழைக்கப்பட்டது. இயக்குனர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்த இந்த படம் கடந்த 2024ம் ஆண்டில் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி உலகளவில் 445 கோடி ரூபாய் வசூலித்தது. அந்த ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிகளவில் வசூல் செய்த படமும் இதுதான். அடுத்தடுத்த இடங்களில் அமரன் வேட்டையன் படங்கள் வசூலில் இருந்தன.
தி கோட் படத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சினேகா மீனாட்சி சௌத்ரி கனிகா லைலா பிரபுதேவா பிரசாந்த் மைக் மோகன் ஜெயராம் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. வில்லன் நடிப்பில் விஜய் இந்த படத்தில் அதகளம் செய்திருந்தார்.
ஆனால் இந்த படத்தில் நடிக்கும் போதே இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று விஜய் அறிவித்துவிட்டார். ஏனெனில் அப்போதே அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கி விட்டார். நடிகர் விஜய் சொன்ன கடைசி படம்தான் ஜனநாயகன் என்ற பெயரில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிற ஜனவரி 9ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் ஜனநாயகன் படம் குறித்த ஒரு தகவல் சில தினங்களாக வேகமாக பரவி வருகிறது. அதாவது தவெக சார்பில் நடத்தப்பட்ட அரசியல் மாநாடுகள், மாவட்டம் வாரியாக சனிக்கிழமை தோறும் விஜய் நேரில் சென்ற பொதுக்கூடங்கள் போன்றவை படம் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனநாயகன் படத்தில் அந்த காட்சிகளும் வர உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.
ஆனால் உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஏனெனில் மதுரையில் தவெக கட்சி சார்பில் 2வது மாநில மாநாடு நடப்பதற்கு முன்பே நடிகர் விஜய் ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்து விட்டார். அந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றதாக இயக்குனர் எச் வினோத்தும் தெளிவாக அப்போதே கூறிவிட்டார். அதனால் இதுபோன்ற ஒரு செயல் படத்தில் நடக்க வாய்ப்பே இல்லை.
மேலும் இப்போது விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் 10 பேரை வைத்துக்கொண்டு 1000 பேராக 10 ஆயிரம் பேராக திரையில் காட்டும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. அதனால் தவெக கட்சி மாநாடு பொதுக்கூட்டங்கள் சார்ந்த எந்த ஒரு காட்சிகளும் ஜனநாயகன் படத்தில் இடம்பெற வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு நோக்கத்தில் படக்குழு மற்றும் நடிகர் விஜய் தரப்பில் எந்தவிதமான யோசனையும் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.





