நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் ஜனநாயகன். இந்த படம் அவரது 69வது படமாகும். இயக்குனர் எச் வினோத் டைரக்ட் செய்துள்ள இந்த படத்தை பெங்களூவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே மமிதா பைஜூ பிரியாமணி நரேன் பிரகாஷ் ராஜ் கௌதம் மேனன் பாபி தியோல் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
ஜனநாயகன் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதுதான் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி படமாகும். இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் ஏற்கனேவே விஜய் திட்டவட்டமாக அறிவித்தும் விட்டார். அதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய் கடந்தாண்டில் விக்கிரவாண்டியிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையிலும் அரசியல் மாநாடுகளை வெற்றிக்கரமாக நடத்தி முடித்தார். பிறகு கடந்த மாதத்தில் உங்க விஜய் நான் வரேன் என்ற தலைப்பில் மாவட்டம் வாரியாக சனிக்கிழமை தோறும் மக்கள் சந்திப்பு பயணமும் மேற்கொண்டார். திருச்சி அரியலூர் நாகை திருவாரூர் நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் அவர் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் பேசினார்.
தொடர்ந்து கடந்த மாதம் 27ம் தேதி இரவு கரூரில் தவெக கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசிய போது நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் 18 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சட்ட ரீதியாகவும் காவல் துறை நடவடிக்கையாலும் தவெக கட்சி பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. மக்கள் மத்தியிலும் ஒருவித விரக்தியை அதிருப்தியை விஜய் கட்சி மீது ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜனநாயகன படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த விழா நடக்குமா, அப்படியே நடந்தாலும் அதில் விஜய் அதில் பங்கேற்று பேசுவாரா என்ற குழப்பம் நீடிக்கிறது. கரூர் துயர சம்பவம் பெரிய பாதிப்பை தந்துள்ள நிலையில் ஜனநாயகன் படம் இசை வெளியீடு விழா நடக்கவே வாய்ப்பில்லை. அப்படியே நடந்தாலும் நிச்சயமாக அதில் விஜய் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதனால் அந்த விழா ரத்து செய்யப்படவே அதிக வாய்ப்புள்ளது. அத்துடன் ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என்பதும் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது. கரூர் துயர சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பு காலத்தால் மட்டுமே குறையும் என்பதால் பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியாவது வணிக ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும், படத்துக்கும் போதிய வரவேற்பு கிடைக்காமல் போகலாம் என்பதால் ரிலீஸ் இன்னும் தள்ளி வைக்கவே அதிக வாய்ப்புள்ளது.





