நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களில் மிக முக்கியமான படம் மனிதன். ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 1987ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. எஸ்பி முத்துராமன் மனிதன் படத்தை டைரக்ட் செய்திருந்தார். இதில் ரஜினியுடன் ரூபிணி ஸ்ரீவித்யா ஜெய் கணேஷ் சோ வினு சக்ரவர்த்தி மாதுரி ரகுவரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படம் 38 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் 10ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்த பொன்விழா ஆண்டில் மனிதன் படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மனிதன் படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வைரமுத்துதான்.
அதனால் மனிதன் படம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் செய்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது, மனிதன் திரைப்படம் மறுவெளியீடு காண்பது மகிழ்ச்சி. ரஜினியின் சாகசம் குணச்சித்திரம் இரண்டுக்கும் வழிவிட்ட படம் மனிதன். இன்னோர் இசையமைப்பாளர் உச்சத்திலிருந்த காலகட்டத்தில் அதிகம் புகழ்பெறாத சந்திரபோஸை அழைத்து என்னிடம் ஆறு பாடல்களை ஒப்படைத்தது ஏவி.எம் நிறுவனம்.
அத்துணை பாடல்களும் அதிரி புதிரி. ஏவி.எம் அலுவலகத்துக்கு சிற்றுண்டி உண்ணவந்த ரஜினிகாந்த் பக்கத்து அறையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு பாடலைக்கேட்டு நல்லா இருக்கே, இது யார் படத்துக்கு ? என்று கேட்டார். மனிதன் படத்துக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டு இடமில்லாமல் ஒதுக்கப்பட்ட பாட்டு என்றார்கள்.
அய்யய்யோ! எவ்வளவு நல்ல பாட்டு. எப்படியாவது சேர்த்துவிடுங்கள் என்று ரஜினி பதறினார். அதனால் அதைத் தலைப்புப் பாடலாக இணைத்தார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். அதுதான் மனிதன் மனிதன் எவன்தான் மனிதன் என்ற பாட்டு. பின்னாளில் தேசியகீதமாய்த் தெருத்தெருவாய் ஒலித்த பாட்டு.
மனிதன் படத்தை நினைத்தால் என் பாட்டுப் பொருளை மீட்டுக்கொடுத்த ரஜினிதான் என் நினைவுக்கு வருவார். என்னையும் சந்திரபோஸையும் உடனிருந்து ஊக்கப்படுத்திய ஏவி.எம்.சரவணன் மறக்க முடியாத மனிதர். இப்போது பார்த்தாலும் படம் முழுவதும் பாய்ந்துகொண்டே இருக்கும் ரஜினி மின்சாரம் என்று அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து பெருமிதமாக கூறியிருக்கிறார்.





