சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தார்கள். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்ததால் கண்டிப்பாக படத்தில் பெரும் திருப்பம் இருக்கும், மாஸ் காட்சிகள் தூள் கிளப்பும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் அப்படிப்பட்ட எந்த ஒரு சீன்களும் இல்லை. திரைக்கதையிலும் தொய்வு ஏற்பட, லாஜிக் மீறல்கள் நிறைய இருந்தன. அமீர்கான் வந்த காட்சிகளும் ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை.
இப்படி கூலி திரைப்படத்தில் பல நெகடிவ் இருந்தாலும் அதன் வசூல் என்னவோ ஓரளவு பாசிட்டிவ் ஆகவே அமைந்தது. திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஓரளவு லாபத்தையே இந்த திரைப்படம் கொடுத்ததாக கூறினார்கள். இந்த நிலையில் கூலியை தொடர்ந்து தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஏற்கனவே வெளியாகி இருந்த இதன் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். சிவராஜ்குமார், மோகன்லால் என பிற மாநில நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்று இருந்த இந்த திரைப்படம், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களிலேயே ஜெயிலர்தான் அதிக வசூல் செய்த திரைப்படம் என்று கூறி வருகிறார்கள். இப்படியான சூழலில் அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கேரளா கர்நாடக மாநிலங்களில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பகத் பாஸில், தெலுங்கு நடிகர் பாலையா உள்ளிட்டோர் இடம் பெற்று இருப்பதாக சொல்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் தற்போது, இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு இருக்கிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில் சூட்டிங்கின்போது நெல்சன் ஒரு கதையை ரஜினிகாந்த்துக்கு தெரிவித்ததாகவும், அது நடிகருக்கு மிகவும் பிடித்து விட்டது என்றும் சொல்லப்படுகிறது. இதனால் மூன்றாவது முறையாக நெல்சன் ரஜினிகாந்த் ஜோடி இணையலாம் என்று திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.





