தமிழ் சினிமாவில் இருந்து பல நடிகர்கள் அரசியலுக்கு வந்து விட்டனர். உதாரணமாக எம்ஜிஆர் துவங்கி சிவாஜி கணேசன் டி ராஜேந்தர் கே பாக்யராஜ் சரத்குமார் நவரச நாயகன் கார்த்திக் கருணாஸ் மன்சூர் அலிகான் விஜயகாந்த் கமல்ஹாசன் கடைசியாக விஜய் வரை பலரும் அரசியல் களத்தில் குதித்து விட்டனர்.
ஆனால் எம்ஜிஆருக்கு பிறகு அரசியலில் அதிக வரவேற்பை பெற்றவர் கேப்டன் விஜயகாந்த் தான். அதற்கு பிறகு நடிகர் விஜய்க்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் வருகிற சட்டசபை தேர்தலில் அவருக்கு கிடைக்கும் ஓட்டுகள்தான் அவரது மக்கள் செல்வாக்கை தீர்மானிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த சூழலில் தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருபவர் நடிகர் அர்ஜூன். ஆக்சன் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும் இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது. ஆனால் இவர் இன்னும் அரசியலுக்கு வராமல் இருக்கிறார். இதுபற்றி அவரே ஒரே நேர்காணலில் வெளிப்படையாக பேசியும் உள்ளார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் கூறியதாவது, இப்போது இருக்கிற அரசியல் வேற மாதிரி இருக்கு. எல்லாமே பணம்தான். அரசியல் கட்சியிலிருந்து எனக்கு மிகப்பெரிய பதவி தேடி வந்தது. ஆனால் அது எனக்கு தேவை இல்லை, வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.
நாம நடக்கிற தப்பை தட்டிக் கேட்கணும் என்றுதான் வருகிறோம். ஆனால் அது நடக்காது. உங்க மேலதிகாரி சொல்றதுதான் நீங்கள் செய்யணும். அவருக்கு ஜிங்ஜக் போடணும். அது என்னால முடியாது. பணம் இருந்தால்தான் அரசியலில் ஜெயிக்க முடியும். அந்த அளவுக்கு என்கிட்ட பணம் இல்ல. அரசியலில் இருக்க வேற ஒரு மனநிலை வேண்டும்.
நீங்கள் அரசியலுக்கு வந்துட்டால் உங்களை வம்புக்கு இழுப்பாங்க. உங்க குடும்பத்தை இழுப்பாங்க. கேவலமா என்ன வேண்டும் என்றாலும் பேசுவாங்க. அது தினமும் நடக்கும். ஆனால் நாம ஒண்ணுமே பண்ண முடியாது. இது தேவையா நமக்கு என்றுதான் நான் அரசியலுக்கு வராமல் ஒதுங்கிவிட்டேன் என்று நடிகர் அர்ஜூன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





