நடிகர் சிவாஜி கணேசன் எப்போதுமே அவரது படங்களில் நடிப்பில் அவரது உச்சம் ரசிகர்களுக்கு திரையில் தெரிய வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையாக எச்சரிக்கையாக இருப்பார். அதே போல் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள் குறித்தும் கவனமாக இருப்பது அவரது வழக்கம். குலமா குணமா என்ற படத்தில் ஜெய்சங்கர், சிவாஜி கணேசனுக்கு தம்பியாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சிவாஜி கணேசனும் ஜெய்சங்கரும் இணைந்து நடிக்கும் ஒரு காட்சி எழுதப்பட்டு இருந்தது. இந்த காட்சியை விளக்குவதற்காக சிவாஜி கணேசனின் அறைக்குச் சென்றார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன். ஆனால் ஒரு மணி நேரமாகியும் அவர் அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை.
சிவாஜி கணேசன் அறைக்குப் போன இயக்குனர் இன்னும் வெளிவரவில்லையே என்று காத்துக்கொண்டிருந்தார் ஜெய்சங்கர். அப்போது அங்கு இருந்த உதவி இயக்குனர் ஒருவரிடம், இயக்குனர் உள்ளே என்ன செய்துகொண்டிருக்கிறார்? என ஜெய்சங்கர் கேட்டார். இயக்குனர் சிவாஜியின் அறைக்குள் அந்த குறிப்பிட்ட காட்சியை மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறார் என்று ஜெய்சங்கர் தெரிந்துகொண்டார்.
மேலும் அந்த உதவி இயக்குனர், உங்களால்தான் அந்த காட்சியை மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் என்றும் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெய்சங்கர், நேராக சிவாஜியின் அறைக்குள் சென்று இயக்குனர் கோபாலகிருஷ்ணனிடம், நான் காலில் விழும் காட்சியை மாற்றி எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் என்கிறார்கள். அதுவும் நான்தான் அதற்கு காரணம் என்றும் கூறுகிறார்கள். என்ன விஷயம்? என்று கேட்டார்.
அதற்கு இயக்குனர், சிவாஜி என்னிடம் ஜெய்சங்கர் பல படங்களில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அவர் காலில் விழுவது போல் காட்சி இருந்தால் சரியாக வராது. காட்சியை மாற்றி எழுதிவிடு என்று கூறினார். அதனால்தான் காட்சியை வேறு மாதிரி எழுதுகிறேன் என்று கூற ஜெய்சங்கருக்கு கடும் கோபம் வந்து விட்டது.
உடனே சிவாஜியிடம், உங்கள் காலில் நான் விழமாட்டேன் என்று எப்போதாவது நான் கூறினேனா? உங்கள் காலில் விழுவது என்னுடைய பாக்கியம் என்று கூறியிருக்கிறார் ஜெய்சங்கர். அவரது இந்த பெருந்தன்மையை பார்த்து உடனே சிவாஜி நெகிழ்ந்துபோய் ஜெய்சங்கரை கட்டிப்பிடித்துக் கொண்டு அவரை மனதார பாராட்டியிருக்கிறார்.





