தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. சமீபகாலமாக சில படங்களில் கதையின் நாயகனாகவும் அவர் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் இருந்த காமெடி நடிகர்கள் அனைவருமே ஹீரோவாக நடிக்க துவங்கி விட்டதால் காமெடி நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் பலத்த தட்டுப்பாடு அதாவது பஞ்சம் நிலவுகிறது.
அதனால் பெரும்பாலான படங்களில் காமெடி ரோலில் நடிக்க நடிகர் யோகிபாபுதான் ஒரே சாய்ஸ் ஆக இருந்து வருகிறார். அதனால் அவர் மிகவும் ஒரு பிஸியான காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அடிக்கடி கோவில்களுக்கு யோகிபாபு செல்வதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் மேக்ஸ். இந்த படத்தின் இயக்குனர் விஜய் கார்த்திகேயன் தற்போது மார்க் என்கிற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்திலும் நாயகனாக கிச்சா சுதீப் தான் நடித்திருக்கிறார்.
இந்த மார்க் படமும் மேக்ஸ் படம் போலவே அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி உள்ளது. வருகிற கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மார்க் படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அப்போது இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் கிச்சா சுதீப் மற்றும் படக்குழுவினர் கலந்துக்கொண்டு பேசினர்.
இந்த விழாவில் மார்க் படத்தில் காமெடி ரோலில் நடித்துள்ள நடிகர் யோகி பாபுவும் கலந்துக்கொண்டார். அப்போது மேடையில் இருந்த அவரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், சம்பளம் மட்டும் வாங்கிக் கொள்கிறீர்கள், ஆனால் நீங்கள் நடிக்கும் படங்களின் பிரமோசனுக்கு ஏன் வருவதில்லை? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த யோகி பாபு, இப்போது நான் இந்த படத்தின் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பற்றி மட்டுமே கேளுங்கள் என்று சற்று கோபமாக பதில் அளித்தார்.
பிறகு அவர், நேரமிருந்தால் நான் வரமாட்டேனா? சின்ன படங்களில் நான் காமெடி நடிகராகதான் நடித்திருப்பேன். ஆனால் கடைசியில் அந்த படத்தில் என்னை நாயகன் அளவுக்கு முன்னிலை படுத்தி விடுகிறார்கள். அப்படி என்றால் என்னால் எப்படி அந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்பினார். அவர் பேசிய இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





