தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார். அவரை போலவே கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிவராஜ்குமார். இவர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
சில காட்சிகளில் மட்டுமே சிவராஜ்குமார் வந்திருந்தாலும் அவரது கெத்தான நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் என்ற படத்திலும் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது ஜெயிலர் 2 படத்திலம் சிவராஜ்குமார் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டில் நடிகர் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்தினரும் இதனால் கவலையில் இருந்தனர். உடனடியாக நடிகர் சிவராஜ்குமார் அமெரிக்கா அழைத்துச் செல்லபட்டார். அங்குள்ள மியாமி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சில வாரங்கள் மருத்துவமனையில் இருந்த பிறகு அவர் புற்றுநோய் பாதிப்பில் இருந்து விலகினார். மீண்டும் கர்நாடகாவுக்கு திரும்பிய அவர் சில மாதங்கள் வீட்டில் தங்கி ஓய்வெடுத்தார். இப்போது முழுமையாக நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில் சிவராஜ்குமார் இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிவராஜ்குமார் சென்னையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆபரேஷனுக்காக நான் அமெரிக்காவுக்கு சென்றேன். அங்கே போகும்போது கண்கள் முழுக்க கண்ணீராக இருந்தது. ரொம்பவும் எமோஷனல் ஆகிவிட்டேன். மீண்டும் வருவோமா மாட்டோமா என்பது தெரியாது. டாக்டர்கள் கேரண்டி கொடுத்திருந்தாலும் எனக்கு பயமாக இருந்தது.ஆபரேஷன் அன்று காலையில் எனக்கு ஏதோ கொடுத்தார்கள். நான் மயக்க நிலைக்குச் சென்றேன்.
பல மணி நேரம் கழித்து நான் கண் விழித்து பார்த்தபோது என் மனைவி அருகில் இருந்தார். அவரது கையைப் பிடித்த போது, மீண்டும் நான் உன் கையைப் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை என்றுதான் நான் சொன்னேன். எனக்கு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். அதற்குபிறகு எனக்கு இந்த உலகமே வேறு மாதிரி தெரிந்தது என்று நடிகர் சிவராஜ்குமார் அந்த விழாவில் எமோஷனலாக பேசியிருக்கிறார்.





