தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இந்திய அளவில் கவனிக்கப்படும் பாராட்டப்படும் ஒரு சிறந்த படைப்பாளியாக மணிரத்னம் தனது படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார். மௌன ராகம், இதயக்கோவில், நாயகன், தளபதி, கீதாஞ்சலி, பம்பாய், ரோஜா, ஆயுத எழுத்து, ராவணன் என மணிரத்னம் இயக்கிய படங்கள் அனைத்துமே ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருக்கின்றன.
எழுத்தாளர் கல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வன் கதை, 2 பாகங்களாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியானது. முதல் பாகம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், 2ம் பாகம் தோல்வியடைந்தது. எனினும் பொன்னியின் செல்வன் பாகம் 1 படம் 4 தேசிய விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன், திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்த தக்லைப் படத்தை மணிரத்னம் இயக்கியிருக்கிறார். இந்த படம் வருகிற 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தக்லைப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
மணிரத்னத்தை பொருத்தவரை இந்திய அளவில் பேசப்படும் ஒரு இயக்குனராக இருப்பதால், அவரது படத்தில் நடிக்க நடிகர்கள் பலரும் தவம் இருக்கின்றனர். அவரது படத்தின் நடிக்க சம்பளமே தராவிட்டாலும், அவரது இயக்கத்தில் நடிப்பதே தங்களுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு என்று சினிமா நட்சத்திரங்கள் பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன், கதாநாயகி சாய் பல்லவி, டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில் இயக்குனர் மணிரத்னம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் மணிரத்னம் பேசுகையில், ரியல் லைப் படங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பு கிடைக்கும். அந்த வகையில் உருவாகியுள்ள அமரன் படத்தின் ரிலீஸூக்காக நானும் காத்திருக்கிறேன். இப்படி ஒரு படத்தை சாத்தியப்படுத்திய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு பாராட்டுக்கள்.
புதிய நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து தங்களை உயர்த்திக்கொள்ள ஆக்சன் ஹீரோக்களாக உருமாறுவார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் படிப்படியாக தன்னுடைய நாலேட்ஜை உயர்த்திக்கொண்டு தற்போது ஆக்சன் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள சாய் பல்லவிக்கு நான் ரசிகன். விரைவில் அவருடன் இணைந்து செயல்பட நான் விரும்புகிறேன் என்று கூறினார். இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விரைவில் மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பார் என்பதும் இதன் மூலம் உறுதியாகி விட்டது.





