தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இப்போதும் 75 வயதான நிலையில் அவரை சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் தான் ரஜினி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளில் வெளியான படையப்பா படம் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் என அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் இப்போது மக்கள் காவலன் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். நடிகர் ரஜினிக்கு மகனாக காலா படத்தில் மணிகண்டன் நடித்திருந்தார். இது அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மணிகண்டன், காலா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில விஷயங்கள் குறித்து பகிர்ந்துக்கொண்டார். அப்போது மணிகண்டன் கூறியதாவது, ஒருநாள் ரஜினி நடித்த படங்களில் யாருக்கு எந்த படம் பிடிக்கும் ஒரு டிஸ்கஷன் எங்களுக்குள் நடந்தது. அப்போது ரஜினியும் எங்களுடன் இருந்தார்.
பாட்ஷா படம் பிடிக்குமா, அண்ணாமலை படம் பிடிக்குமா என்ற கேள்வி வந்த போது அங்கு இருந்த எல்லாருமே பாட்ஷா படம்தான் பிடிக்கும் என்று கூறினர்.ஆனால் நான் மட்டும் அண்ணாமலை படம் பிடிக்கும் என்று சொன்னேன். ஏன் ஏன் அண்ணாமலை படம் பிடிக்கும்? பாட்ஷா படம் பிடிக்காதா என்று என்னிடம் ரஜினி சார் கேட்டார்.
இல்லே சார் பாட்ஷா படமும் பிடிக்கும். ஆனால் அதை விட அண்ணாமலை தான் கிரேட் என்றேன். எப்படி சொல்றீங்க என்று ஆச்சரியமாக கேட்டார். பாட்ஷா படத்தில் ரகுவரன் வில்லன். அவரை கொன்னுட்டா படம் முடிஞ்சுரும் என்று எனக்கு தெரியும். ஆனா அண்ணாமலை படத்துல வில்லன் அவரோட பிரண்ட். கடைசியில் அவரை மன்னிச்சு நல்லா வாழ்ந்தவன் கெடக் கூடாதுன்னு சொல்லி அம்மா கிட்ட நண்பன் வீட்டை அண்ணாமலை கொடுத்துடறான்.
அப்போ அண்ணாமலை வில்லனை பழிவாங்கற ஹீரோவையும் தாண்டி ஒரு உன்னத நிலைக்கு போயிடறான். அதனால் அண்ணாமலை படம் ஹீரோ வில்லன் என்ற நிலையை தாண்டி ஒரு பிலாஸபியான ஒரு படமாக இருந்துச்சு சார் என்றேன். அதை கேட்டதும், எஸ் எஸ் அண்ணாமலை கிரேட், ரொம்ப நல்ல படம் என்று ரஜினியும் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார் என்று நடிகர் மணிகண்டன் கூறியிருக்கிறார்.





