நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நகர்வுகளில் அவர் பட்டையை கிளப்பி வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தி காட்டினார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராகவும் மத்தியில் பாஜக அரசுக்கு எதிராகவும் அவர் குரல் கொடுத்து வருகிறார். இதன் நடுவே திரைத்துறையில் தனது கடைசி திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார். இதனை இயக்குவது வினோத். சதுரங்க வேட்டையின் மூலம் அறிமுகமான இவர் அஜித்துடன் இணைந்து மூன்று திரைப்படங்களை எடுத்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பையனூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ் கௌதம் மேனன் நரேன் பாபி தியோல் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் இது என்பதால் அதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை தான் தற்போது செய்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் வேலைகளை முடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியலில் தீவிர கவனம் செலுத்த இருக்கிறார் விஜய்.
அண்மையில் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், திமுகவையும் பாஜகவையும் கடுமையாக சாடி இருந்தார். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில், திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் நேரடி போட்டி என்று அவர் அறிவித்திருந்தார். மன்னராட்சி முறை இங்கு நடப்பதாகவும் அவர் சாடியிருந்தார். விஜயின் பேச்சு இணையத்தில் வைரலாக, அரசியலில் பேசு பொருளானது. இது ஒரு பக்கம் இருக்க, ஜனநாயகனை தொடர்ந்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல் கசிந்தது.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர், மே மாதத்துடன் தான் சினிமாவில் ஒப்புக்கொண்ட பணிகளை எல்லாம் முடிக்கப் போவதாக விஜய் என்னிடம் தெரிவித்தார். இதற்கு முன்பு திரையில்தான் படத்தை பார்த்தீர்கள். ஜூன் ஜூலை மாதங்களுக்குப் பிறகு நீங்கள் நேரடியாக பெரிய பெரிய படங்களை பார்க்கலாம் என்று அவர் பேசியிருக்கிறார். இதன் மூலம் விஜய் ஜனநாயகன் படத்திற்கு பிறகு, தேர்தலுக்காக தீவிர கவனம் செலுத்த இருப்பது உறுதியாகி இருக்கிறது.





