இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள படம் பராசக்தி. நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள பராசக்தி படம் வரும் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பராசக்தி படத்தின் கதை தன்னுடையது என்று திரைப்பட இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில் ராஜேந்திரன் கூறியிருப்பதாவது, நான் எழுதிய செம்மொழி என்ற கதையை திருடி பராசக்தி என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. எனது அனுமதி இன்றி உருவாக்கப்பட்ட இந்த படத்தை வெளியிட உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கோரியிருக்கிறார்.
மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் உண்மை தன்மையை கண்டறிய முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி வரும் ஜனவரி 2ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனால் செம்மொழி மற்றும் பராசக்தி ஆகிய இரண்டு கதைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து எழுத்தாளர் சங்கம் ஆய்வு செய்து அந்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. எழுத்தாளர் சங்கத்தின் இந்த அறிக்கை ஜனவரி 2ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட பின்பே பராசக்தி படத்தின் வெளியீடு குறித்த இறுதி முடிவு என்னவென்று தெரிய வரும்.
கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் இந்த கதை திருட்டு பஞ்சாயத்து இருந்து வருகிறது. பல இயக்குனர்கள் இப்படி மற்றவர்களின் கதைகளை திருடி தங்களது சொந்த கதை போல படங்களை உருவாக்கி விடுகின்றனர். பிறகு அது திரைக்கு வரும்போது சம்பந்தப்பட்ட நபர்கள் இது எங்களுடைய கதை என கோர்ட்டுக்கு சென்று விடுகின்றனர்.
இதற்கு முன்பே சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் அந்த கதைக்கு உரிமையானவர்களிடம் நேரடியாக பேசி அந்த கதைக்கு உண்டான விலையை கொடுத்து அவர்களது அனுமதி பெற்று படத்தின் திரைக்கதையை உருவாக்கினால் இந்த பஞ்சாயத்து கடைசி நேரத்தில் படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தாது. இப்போது இந்த பிரச்னையால் பராசக்தி படம் குறித்த தேதியில் ஜனவரி 10ல் ரிலீஸ் ஆகுமா என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது.





