சமீபகாலமாக தியேட்டர்களில் பெரும்பாலான நாட்களில் ரசிகர்கள் கூட்டமே இருப்பதில்லை. ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் சிவகார்த்திகேயன் தனுஷ் விஜய் சேதுபதி என சில முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே ஓரளவுக்கு ரசிகர்களின் கூட்டத்தை தியேட்டர்களில் காண முடிகிறது. இதற்கு ஓடிடியின் ஆதிக்கமும் முக்கியமான ஒரு காரணமாகும்.
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு மறுநாளே 10ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தை வெளியிடவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.. ரெட் ஜெயிண்ட் முவீஸ்தான் பராசக்தி படத்தை வெளியிடுகிறது.
அதனால் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு போதிய எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைப்பதில் பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே எங்களுக்கு விஜய் படமே வேண்டாம். பராசக்தி படத்தை கொடுங்கள். அந்த படத்தை நாங்கள் திரையிடுகிறோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் சில தினங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலினிடம் பேசியதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இதற்கு காரணம், ஜனநாயகன் படத்தை திரையிடுவதற்கு முன்பாக, வினியோகஸ்தர்கள் தரப்பில் தியேட்டர்களில் 80 – 20 என்ற ஷேர் பேசப்பட்டுள்ளது. அதாவது டிக்கெட் வசூலில் விநியோகஸ்தர்களுக்கு 80 சதவீதம், தியேட்டர் உரிமையாளர்களுக்கு 20 சதவீதம் என்றும் பங்கு என்று கூறப்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்தை அதிகமான விலைக்கு வாங்கியிருப்பதால் இந்த 80 – 20 ஷேருக்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர்களிடம் வினியோகஸ்தர்கள் கூறியிருக்கின்றனர். ஏற்கனவே தியேட்டர் உரிமையாளர்கள் பலத்த நஷ்டத்தில் தியேட்டர்களை நடத்தி வருகின்றனர். தியேட்டர்களில் பெரும்பாலான படங்கள் ஓடுவதே இல்லை. ரஜினி விஜய் போன்ற பெரிய நடிகர்கள் படம் வந்தால்தான் ஓரளவு லாபம் பார்க்கின்றனர்.
தற்போது ஜனநாயகன் படத்துக்கு 75 – 25 ஷேர் வரும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்த்த நிலையில் 80-20 என்று வினியோகஸ்தர்கள் கூறியதால் அதிர்ச்சியில் உள்ளனர். அதனால் விஜய் படத்துக்கு பதிலாக பராசக்தி படத்தை ரிலீஸ் செய்கிறோம். 75 – 25 என்ற ஷேர் கொடுங்கள் என்று உதயநிதியிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதனால்தான் பராசக்தி படம் ஜனவரி 14க்கு பதிலாக 10ம் தேதியே ரிலீஸ் செய்ய முடிவானதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





