எப்போதுமே புதியதாக உணவுகளை சமைத்து சாப்பிட்டால்தான் அது உண்மையான ருசியாக இருக்கும். ஏற்கனவே சமைத்து ஆறிப்போன சாம்பார் பொரியல் உள்ளிட்ட அயிட்டங்களுடன் புதிய சில அயிட்டங்களை சேர்த்து சமைத்தாலும் அது உண்மையான ருசியை தராது. ஆனால் சினிமாவில் மட்டும் பழைய புளித்துப் போன மாவை அரைத்து அரைத்து ரசிகர்களுக்கு சலிக்காமல் தந்து வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரீமேக் படங்களாக தான் இருக்கின்றன. சொந்த கதையில் படம் எடுக்கும் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் மாயமாகி கொாண்டே இருக்கின்றனர்.
இயக்குனர்கள் பாரதிராஜா கே பாக்யராஜ் போன்றவர்கள் பழைய படங்களை பார்த்து காப்பியடித்து தமிழ் படங்களை தரவில்லை. வாழ்க்கையில் நடக்கும் யதார்த்தங்களை பார்த்து தமிழ் சினிமாவை கலையின் உச்சத்துக்கு கொண்டு சென்றனர். மனித வாழ்க்கை கதைகளை திரையில் கொண்டு வந்து ரசிகர்களுக்கு நல்ல கருத்துகளை சொன்னார்கள்.
ஆனால் இன்றைய இயக்குனர்கள் ஜெராக்ஸ் கடை உரிமையாளர்களாக இருக்கின்றனர். சொந்த சரக்கு இல்லாமல் தமிழிலேயே 1980 – 90களில் வந்த படங்களை அப்படியே காப்பியடிக்கின்றனர். கன்னடம் மலையாளம் தெலுங்கு இந்தி சில நேரங்களில் ஹாலிவுட் படங்களில் இருந்தும் அப்படியே கதைகளை திருடி எடுக்கின்றனர்.
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் நேற்று பரபரப்பாக வௌியானது. அதுவரை சந்தேகமான பேசப்பட்ட ஒரு விஷயம் 100 சதவீதம் உறுதியாகி விட்டது. தெலுங்கில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் படம்தான் ஜனநாயகன் என்பது தெரிந்துவிட்டது. இதற்காக பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை ரூ. 4 கோடி விலை கொடுத்து ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இப்படி கதையை காட்சிகளை காப்பியடித்து ஒரு படம் எடுப்பது எந்த வகையில் நியாயம்? பாலகிருஷ்ணா நடித்த காட்சிகளில்விஜய் வசனம் பேசி நடிப்பதை பார்ப்பதுதான் ரசிகர்களின் உண்மையான சந்தோஷமா? இந்த ஒத்திகை நாடகத்தை எடுக்க 350 கோடி ரூபாய் செலவு செய்து ஒரு படம் எடுப்பது அவசியமா? சொந்தமாக கதை எழுத முடியாத சரக்கு இல்லாதவர்கள் எப்படி பெரிய இயக்குனராக புகழ் பெற முடியும் என்று ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.





