இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் கடந்த 3ம் தேதி மாலை வெளியானது. 2023ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தில் ரீமேக் தான் ஜனநாயகன் என சொல்லப்பட்டது. நந்தமூரி பாலகிருஷ்ணா கேரக்டரில்தான் விஜய் நடித்திருக்கிறார் என்ற தகவலும் பரவியது.
இந்நிலையில் சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் எச் வினோத், இது முழுக்க முழுக்க தளபதி படம் என்று பெருமையாக கூறியிருந்தார். ஆனால் ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு இது பகவந்த் கேசரி தெலுங்கு படத்தின் ரீமேக் தான் என்று நெட்டிசன்கள் உறுதியாக கூறினர்.
இதற்கிடையே இந்த படத்தின் ரீமேக் உரிமையை ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள பெங்களூரு கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் 4 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியதும் உறுதியாகி உள்ளது. எனவே ஜனநாயகன் படம் 100 சதவீதம் பகவந்த் கேசரி படத்தின் ரீ மேக் என்பதும் ஏற்கனவே எடுத்த படம்தான் இப்போது தமிழில் உருவாகி இருப்பதும் ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது.
விஜய் நடித்த கடைசி படம் என்கிற நிலையில் ஜனநாயகன் படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் 9ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே அதற்கு முன்பாக 2 நிமிடம் 52 நொடிகள் கொண்ட ஜனநாயகன் படம் டிரெய்லர் வெளியான நிலையில் 24 மணி நேரத்தில் 37 மில்லியன் அளவுக்கு பார்வையாளர்களை கடந்து டிரெய்லர் பெரிய சாதனை படைத்துள்ளது.
படத்தில் தளபதி வெற்றி கொண்டான் என்ற பெயரில் டிவிகே என்ற கேரக்டரில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவரது மகளாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். டிரெய்லரில் வரும் சில காட்சிகள் அப்படியே பாலகிருஷ்ணா நடிப்பில்தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. அதனால் இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்பது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது.
இதற்கிடையே மலேசியா இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் எச் வினோத், இது அந்த படமா இந்த படமா, ரீமேக்கா என்று ரசிகர்கள் குழப்பம் அடைய வேண்டிய அவசியம் இல்லை. இது முழுக்க முழுக்க தளபதி படம் என்று பெருமையாக பேசியிருந்தார். தமிழ் சினிமாவில் பெரும்பாலான முன்னணி இயக்குவர்கள் சொந்த சரக்கில் கதை எழுதுவதே இல்லை. பிறமொழி படங்களிலிருந்து கதையை சுட்டு தமிழ் படங்களாக தருகின்றனர். இப்படி ஒரு ரீமேக் கதையை கடைசி படமாக இயக்கி விஜய்க்கு வழியனுப்பு விழா நடத்தலாமா? பாலகிருஷ்ணா கிண்டிய பழைய கேசரியை சாப்பிட நாங்கதான் கிடைச்சோமா என்று தளபதி ரசிகர்கள் பயங்கர அப்செட்டில் உள்ளனர்.





