தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரம் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் நடிகர் விஜயகுமார்தான். தாய்மாமன், ஊர் நாட்டாமை, அரசியல்வாதி என கோலிவுட்டில் நடிகர் விஜயகுமாருக்கு பல முகங்கள் உண்டு. இவரின் மூத்த மகளான வனிதா, திரைத்துறைக்கு வர ஆசைப்பட்டு முதல் படத்திலேயே விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார்.

சந்திரலேகா என்னும் பெயரில் உருவான இந்த திரைப்படத்தில், அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் பாடல் இன்றைக்கும் பிரபலம். இதைத்தொடர்ந்து மாணிக்கம் திரைப்படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தார் வனிதா. பிறகு திரைத்துறைக்கு முழுக்கு போட்ட அவர், 2000 ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென தம்பதியருக்குள் மோதல் ஏற்பட்டது. திருமணமான ஐந்தே ஆண்டுகளில் ஆகாஷை விவாகரத்து செய்த வனிதா, ராஜன் ஆனந்த் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் மூன்றே ஆண்டுகளில், இந்த உறவு முடிந்தது.

இந்த நிலையில் வனிதா விஜயகுமார், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றார். அவரின் சமையல் யுத்தியை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் சேர, வனிதாவும் தன் பங்குக்கு சமையல் கலையில் அசத்தினார். அந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியில் வனிதா நிகழ்த்திய மாயாஜாலத்தை யாரும் மறக்கவே மாட்டார்கள். மிகச் சிறப்பாக சமைத்து நடுவர்களை அசர வைத்த அவர், சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.
இதன் மூலம் வனிதா விஜயகுமாரை பலரும் அறிந்தனர். இந்த நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை, 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். கொரோனா நெருக்கடியில் ஊரே திண்டாடி கொண்டிருக்க, விமர்சையாக திருமணம் செய்த இவர்களை பலரும் இணையத்தில் வறுத்தெடுத்தனர். இந்த சூழலில், பீட்டர் பாலை திடீரென பிரிந்தார் வனிதா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் பீட்டர் பாலும் உயிர் இழந்தார்.
இந்த நிலையில் தற்போது யூ டியூப் சேனலை நடத்திக் கொண்டே திரைப்படங்களில் நடித்து வருகிறார் வனிதா. சினிமாவில் மது அருந்துவது மற்றும் புகை பிடிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சினிமாவில் நடிகர்கள் புகைப்பிடித்தால் அதை பலரும் வரவேற்கிறார்கள், ஆனால் நடிகை புகை பிடித்தால் அதை சர்ச்சைக்கு உள்ளாகிறார்கள். நடிகைகள் திரைக்கு வெளியே புகைபிடிப்பது என்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம். காலம் மாறி வருகிறது. பெண்கள் புகைப்பிடித்தாலும் அதை முன்னேற்றமாகத்தான் பார்க்க வேண்டும் வரவேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.





