தமிழ் சினிமா வரலாற்றில் சில படங்களை பற்றி குறிப்பிடாமல் நகர்ந்து போய்விட முடியாது. அப்படிப்பட்ட சில படங்களை வரலாறு பேசியே ஆக வேண்டும். அதுவும் சில படங்கள் காலத்தால் அழியாத படங்களாக இருந்திருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒரு படம்தான் கரகாட்டக்காரன்.
இந்த படம் ஏறக்குறைய தில்லானா மோகனாம்பாள் படத்தின் மறுவடிவம்தான் என்றாலும் கடந்த 1989ம் ஆண்டில் வெளியான இந்த படம் 37 ஆண்டுகள் கடந்தாலும் இப்போதும் ரசிக்கப்படும் ஒரு சூப்பர் படமாக இருக்கிறது. இசையமைப்பாளர் கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் ராமராஜன் கனகா நாயகன் நாயகியாக இந்த படத்தில் நடித்திருந்தனர்.
கரகாட்டக்காரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு கவுண்டமணி செந்தில் காமெடி காட்சிகளும் பாடல்களும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் நடிப்பும் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்த்து ரசிக்க வைத்தன. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா இந்த படத்தில் தான் அறிமுகமானார்.
இரண்டு கரகாட்ட கோஷ்டிகளுக்கு ஏற்படும் தொழில் போட்டி அக்கா தம்பி பாசம் மாமன் மகள் அத்தை மகன் காதல் இடையே கிராமத்து பண்ணையாரின் பகை என இந்த படம் சாதாரணமாக கதையாக இருந்தாலும் கதை திரைக்கதை வசனங்களால் இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்த படத்தில் நடித்த கனகா பிறகு தங்கமான ராசா அதிசயப்பிறவி விரலுக்கேத்த வீக்கம் கோவில் காளை சிம்மராசி தாலாட்டு கேக்குதம்மா போன்ற பல படங்களில் நடித்தார். பிறகு பல ஆண்டுகளாக அவர் சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டார். அவ்வப்போது அவரை பற்றிய கேள்வி ரசிகர்களிடம் எழுந்த நிலையில் அவர் தனிமையில் பங்களா ஒன்றில் வசிப்பதாக மட்டுமே கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகர் ராமராஜனை அவரது வீட்டுக்கு வந்து நடிகை கனகா திடீர் என சந்தித்து இருக்கிறார். அவர்கள் சந்திப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆள் அடையாளமே மாறிய நிலையில் கனகா காணப்படுகிறார். கரகாட்டக்காரன் 2 படம் எடுத்தால் இப்போதும் கூட ரசிகர்கள் வரவேற்பார்கள். இதுகுறித்து கங்கை அமரன் யோசிப்பாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





