கடந்த 2009ம் ஆண்டில் பசங்க படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாண்டிராஜ். 2010ம் ஆண்டில் அருள்நிதி நடித்த வம்சம் படத்தை இயக்கினார். அதே ஆண்டில் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா படத்தை இயக்கினார். அவரே மெரினா படத்தை தயாரித்தார். அருள்நிதி, சிவகார்த்திகேயன் இருவருமே அறிமுகமானது பாண்டிராஜ் படங்களில்தான்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா இது நம்ம ஆளு கடைக்குட்டி சிங்கம் நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய பாண்டிராஜ், இப்போது விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கும் ஒரு படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் நித்யாமேனன், மிஷ்கின் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் பாண்டிராஜ் கூறியதாவது, விஜயகாந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் செய்யும் படிப்புதவி, ஆபீஸ் சென்றால் அனைவருக்கும் சாப்பாடு போடுவது போன்ற அவரது நல்ல கேரக்டர் கேட்டு கேட்டு எனக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது.
விஜயகாந்த் சார் ஆபீஸூக்கு போனேன். வீட்டுக்கும் போனேன். ஆனா அவரை பார்க்க முடியலே. சினிமா துறையில் இருந்தும் அவர் பக்கத்தில் உட்கார்ந்து நான் பேச வாய்ப்பு கிடைக்கலே. அவர் நடித்த பட பூஜைக்கு போனேன். அப்பவும் தூரத்துல இருந்துதான் பார்ததேன். பக்கத்தில் போய் அவர்கூட பேச வாய்ப்பு கிடைக்கலே.
ஒருமுறை விஜயகாந்த் ஆபீஸ்ல இருந்த செக்யூரிட்டி என்கிட்ட கேட்டப்ப, நான் டைரக்டர் ஆகணும். கேப்டன் கிட்ட கதை சொல்லணும் என்றேன். முதலில் யாரிடமாவது அசிஸ்டென்ட் டைரக்ட்ரா சேர்ந்துட்டு அப்புறமா டைரக்டராகற வழியை பார் என்று அந்த செக்யூரிட்டி சொன்னார். ஏவிஎம் ஸ்டுடியோவில் செக்யூரிட்டி வேலை காலி இருக்கு, அங்க போ என்று அவர்தான் கடவுள் மாதிரி ஐடியா கொடுத்தார்.
ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு நிறைய நடிகர்கள், டைரக்டர்ஸ் வருவாங்க. அவங்களை சந்திச்சா உனக்கு டைரக்டர் வாய்ப்பு கிடைக்கும் என்று அந்த செக்யூரிட்டி யோசனை சொன்னார். பிறகு ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு போய் செக்யூரிட்டி வேலைக்கு தான் வந்தேன் என்று கூறி அந்த வேலையில் சேர்ந்து விட்டேன். அதுவும் ஏவிஎம் உலக உருண்டைக்கு கீழ் வாசலில்தான் நிற்பேன் என்று பர்மிசன் கேட்டு வாங்கி அந்த இடத்தில் செக்யூரிட்டியாக நின்றேன். நான் முதன் முதலில் வேலைக்கு சேர்ந்தது ஏவிஎம் ஸ்டுடியோவில் செக்யூரிட்டி வேலைக்குதான் என்று பாண்டிராஜ் கூறியிருக்கிறார்.





