மலையாளத்தில் மணிசித்ரதாழ் என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம்தான் தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியானது. மலையாள படத்தில் மோகன்லால் சுரேஷ்கோபி ஷோபனா நடித்த கேரக்டர்களில் தமிழில் ரஜினிகாந்த் பிரபு ஜோதிகா நடித்திருந்தனர். கடந்த 2005ம் ஆண்டில் வெளியான சந்திரமுகி பெரிய வெற்றியை பெற்றது.
இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவான சந்திரமுகி படத்தில் நயன்தாரா நாசர் வடிவேலு கேஆர் விஜயா சோனு சூட் செம்மீன் ஷீலா சொர்ணா மாளவிகா விஜயகுமார் தியாகு மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அரண்மனை ஒன்றில் சந்திரமுகி ஆவி இருப்பதாக இந்த கதை ஒரு திரில்லர் படமாக உருவாகி இருந்தது.
இந்த படத்தில் பிரபுவின் தாய் மாமாக்களாக நாசர் வடிவேலு தோட்டக்காரர் கேரக்டரில் விஜயகுமார் பிரபுவின் நண்பராக அமெரிக்க டாக்டர் கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்கள். தோட்டக்காரர் விஜயகுமாரின் பேத்தி கேரக்டரில் அந்த அரண்மனையில் வேலை செய்பவராக நயன்தாரா இந்த படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் ரஜினியை அடித்து வீட்டை விட்டு வெளியே விரட்டுவது போன்ற ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியில் நடிகர் நாசர்தான் ரஜினியை அடித்திருப்பார். அப்போது அங்கு வரும் சாமியார், நாசரை திட்டுவார். ரஜினி வெளியே போனால் அது உங்களுக்கு தான் ஆபத்து என்று எச்சரிப்பார். இது அந்த படத்தில் டர்னிங் பாயிண்ட் காட்சியாக இருக்கும். அதன்பிறகுதான் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் நாசர் சந்திரமுகி படம் குறித்து கூறியதாவது, சந்திரமுகி படத்தில் ஒரு காட்சியில் ரஜினி சாரை பிரபு தான் அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும். கதைப்படி அப்படி தான் வர வேண்டும். ஆனால் பிரபு நான் பண்ண மாட்டேன். நாளைக்கு நான் வெளியே போனால் மக்களிடம் அடி வாங்க முடியாதுன்னு சொல்லிட்டார்.
அதுக்கப்புறம் விஜயகுமார் சார் கிட்ட போகும்போது என்னால் பண்ணவே முடியாது. நான் எப்படி ரஜினி சாரை அடித்து துரத்துவது என்று பண்ண மாட்டேன்னு விஜயகுமாரும் சொல்லிட்டார். அதுக்கப்புறம் இயக்குனர் என்னை திரும்பிப் பார்த்தார். நான் பண்றேன் சார் என்று சொல்லி அந்த சீனில் ரஜினியை அடிப்பது போல நான் நடித்தேன் என்று நடிகர் நாசர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





