நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமானவர். பிறகு தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக நடித்து பிறகு படிப்படியாக பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னுக்கு வந்தவர். இப்போது டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார்.
விஜய் சேதுபதி நடித்த அவரது 50வது படம் மகாராஜா. மிகப்பெரிய வெற்றியை தந்தது. இந்த படத்தை குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி இருந்தார். நட்டி, முனிஸ்காந்த், அருள்தாஸ், சிங்கம்புலி, சாச்சனா, அபிராமி, அனுராக் காஷ்யப், மணிகண்டன் என பலரது நடிப்பு வேற லெவலில் இருந்து, பெரிய வெற்றிப் படமாக்கியது.
மகாராஜா படத்தை தொடர்ந்து இப்போது விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். வருகிற டிசம்பர் மாதம் இந்த படம் வெளியாக உள்ளது. அதே போல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் இப்போது திருச்செந்தூரில் நடந்து வருகிறது.
இதற்கிடையே விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இப்போது விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதியும் நடிகராகி விட்டார். ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்த்தில் பீனிக்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். அந்த படம் வருகிற 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
பீனிக்ஸ் படத்தில் புரமோசன் பணிகளில் தீவிரமாக படக்குழு ஈடுபட்டு வருகிறது. படத்தின் நாயகன் சூர்யா சேதுபதி நேர்காணல்களில் பங்கேற்று படம் குறித்து பேசி வருகிறார். ஒரு நேர்காணலில் தனது குடும்பம் பற்றிய பேசிய அவர், எங்கள் குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துவது என் அம்மாவும், என் தங்கையும்தான்.
அம்மாவும், தங்கையும் தான் எங்கள் குடும்பத்தின் உற்சாகத்துக்கே முக்கிய காரணம். இப்போதும் என் அப்பாவை, என் அம்மா அத்தான் என்றுதான் அழைப்பார். அவர்கள் இருவரும் அழகான ஜோடி என்று கூறியிருக்கிறார். கணவரை பெயர் சொல்லி அழைப்பதும், ஒருமையில் குறிப்பிடுவதும் சகஜமாகி விட்ட இந்த காலத்தில், 1980களை போல, விஜய் சேதுபதியை அவரது மனைவி அத்தான் என அழைக்கிறாரா? என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.





