நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் அறிவித்தபடி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை. சென்சார் பிரச்னை காரணமாக அந்த படம் இப்போது கோர்ட் வழக்கில் சிக்கியுள்ளது. இது தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான தெறி படம் கடந்த 15ம் தேதி பொங்கலுக்கு ரி ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் தாணு அறிவித்திருந்தார்.
ஆனால் அந்த நேரத்தில் வா வாத்தியார் தலைவர் தம்பி தலைமையில் திரௌபதி 2 உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியானது. அதனால் தெறி படம் வருகிற 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி 2 படம் 15ம் தேதி ரிலீஸ் என அறிவித்திருந்த நிலையில் போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் 23ம் தேதி ரிலீஸ் என தேதி தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தெறி படத்தின் தயாரிப்பாளர் தாணுவிடம், திரௌபதி 2 படத்தின் இயக்குனர் மோகன் ஜி, தெறி படத்தின் ரீ ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை தயாரிப்பாளர் தாணு ஏற்ற நிலையில் தெறி படம் ரி ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்த மங்காத்தா படம் வரும் 23ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
கண்டிப்பாக திரௌபதி 2 படம் வெளியாகும் போது மங்காத்தா படமும் வெளியாகும் என்பது உறுதியாகி விட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் மோகன்ஜி கூறியதாவது, தெறி படம் ரி ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்த நீங்கள் ஏன் மங்காத்தா ரி ரிலீஸ் தேதியை தள்ளிப்போட சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கேட்கவில்லை என்று பலர் என்னிடம் கேட்டார்கள்.
முதலில் சன் பிக்சர்ஸ் தான் ஜனவரி 23ம் தேதி மங்காத்தா ரி ரிலீஸ் என்று அறிவித்தனர். அதன்பிறகு நாங்கள் பொங்கல் ரிலீஸ் என்று சொல்லிவிட்டு பின்பு 23ம் தேதி ரிலீஸ் என அறிவித்தோம். நாங்கள் அறிவித்த உடனே பொங்கலுக்கு ரி ரிலீஸ் ஆக இருந்த தெறி 23ம் தேதிக்கு தள்ளிப்போனது. தயாரிப்பாளர் தாணு எளிதில் அணுகக் கூடியவர் என்பதால் அவரிடம் இதுபற்றி எடுத்துச் சொன்னோம்.
இந்த படத்தை மிகவும் கஷ்டப்பட்டு பெரிய பட்ஜெட்டில் பண்ணி இருக்கோம். தெறி படம் வந்தால் பெரிய திரைகள் எங்களுக்கு கிடைக்காது. விஜய் அஜீத் என்று 2 பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் சுலபமாக தொழில்நுட்ப ரீதியாக உள்ள நல்ல தியேட்டர்கள் எல்லாம் அந்த படங்களுக்கு போய்விடும் என்று தாணுவிடம் சொன்னேன். அவரும் அதை புரிந்து கொண்டு தனக்கு நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை என்று தெறி படத்தை பெரிய மனதோடு ஒத்தி வைத்திருக்கிறார் என்று இயக்குனர் மோகன்ஜி கூறியிருக்கிறார்.





