நடிகர் ரஜினிகாந்த் நடிக்க வந்த ஆரம்பத்தில் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தார். எனினும் அறிமுக நடிகர் என்கிற பாகுபாடு இல்லாமல் ரஜினியுடன் கமல் மிக நட்பாக பழகினார். அன்பு காட்டி அரவணைத்தார். கமல் நடித்த பல படங்களில் ரஜினியும் இணைந்து நடித்தார். அப்படி அவர்கள் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
ஆனால் ஒரு கட்டத்தில் தங்களால் தயாரிப்பாளர்கள் அதிக லாபம் அடைவதும் தங்களது உழைப்புக்கான சம்பளமும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை என்பதை ரஜினி கமல் இருவருமே தெரிந்துக்கொண்டனர். அதன்பிறகு இருவரும் கலந்து பேசி இனி தனித்தனியாக நடிப்போம் என்ற முடிவுக்கு வந்தனர். அதன்பிறகு தனி தனியாக படங்களில் நடித்து சிகரங்களை தொட்டனர்.
ரஜினி கமல் இருவருமே பெரிய நட்சத்திர நடிகர்களாக உச்சம் தொட்ட நிலையில் அவர்களது நட்பும் அன்பும் இறுகிய நிலையில் சகோதர நண்பர்களாக இருவரும் இன்று வரை பழகி வருகின்றனர். ரஜினியை குறித்து யார் தவறாக விமர்சித்தாலும் கமல் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். அதே போல் கமல் குறித்து யார் தவறாக பேசினாலும் ரஜினியும் அதை பொறுத்துக்கொள்ள மாட்டார்.
அவர்களுக்குள் சினிமா தாண்டிய ஒரு நெருக்கமான நட்பும் உறவும் இருந்து வருகிறது. இந்த சூழலில் மீண்டும் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினி கமல் இணைந்து நடிக்க அந்த படத்தை நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்ய உள்ளார்.
இந்த படத்துக்கான பிரமோ ஷூட் வருகிற பிப்ரவரி 8ம் தேதி துவங்கி 2 நாட்களுக்கு சென்னையில் நடக்கிறது. சன் ஸ்டுடியோஸ் ஆதித்யராம் மற்றும் பிரசாத் ஸ்டுடியோ ஆகிய படப்பிடிப்பு தளங்களில் இதற்கான பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரஜினி கமல் இருவரும் பல ஆண்டுகளுக்கு பிறகு கேமரா முன்பு நின்று நடிக்க இருப்பது அவர்களது ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தை தந்துள்ளது.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தை நடிகர் கமல்ஹாசனே தனது சொந்த நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் துவங்க உள்ளது. இந்த படத்தை ரஜினிகாந்த் நடித்து முடித்த பிறகு ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது.





