தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் யாரும் தொட முடியாத அளவுக்கு மிகப்பெரிய உயரத்திற்கு சென்றவர் நடிகர் விஜய் சேதுபதி. புதுப்பேட்டை சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அவருக்கு கதாநாயகனாகும் வாய்ப்பை சீனு ராமசாமி கொடுத்தார். தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாக உயர்ந்த விஜய் சேதுபதி அடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தார்.
இந்த நேரத்தில்தான் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் வளர்ந்த கார்த்திக் சுப்புராஜ், விஜய் சேதுபதியுடன் இணைந்து பீட்சா திரைப்படத்தை கொடுத்தார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் ஹாரர் ஜானரில் உருவான இந்த திரைப்படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது.
இதன்பிறகு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் திரைப்படங்களின் மூலம் உயர்ந்த விஜய் சேதுபதி, அடுத்தடுத்த படங்களில் பிசியானார். இடையே வாரத்திற்கு ஒரு திரைப்படம் என்ற அளவுக்கு விஜய் சேதுபதியின் படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகின. இதில் ஏகப்பட்ட திரைப்படங்கள் தோல்வியையும் தழுவின. இருப்பினும் தர்மதுரை நானும் ரவுடிதான் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்கள் கொடுத்ததன் மூலம் தனது இருப்பை நிலைநாட்டிக் கொண்டார்.
ஹீரோவாக இருந்த விஜய் சேதுபதிக்கு பேட்ட திரைப்படத்தின் மூலம் வில்லனாகும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினிக்கு வில்லனாக நடித்த அவர் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், மாஸ்டரில் விஜய்க்கு வில்லனாக பவானியாக வந்து அதற்கு ஈடு கட்டினார். விஜய் சேதுபதிக்கு வில்லன் கதாபாத்திரம் கச்சிதமாக இருப்பதாக பலரும் கூறினர். தொடர்ந்து விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக வந்து அசத்தினார்.
கடைசியாக பாலிவுட் உலகத்திற்கும் சென்ற அவர், ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக தோன்றினார். தற்போது விஜய் சேதுபதி தனது ஐம்பதாவது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மகாராஜா என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த படத்தை, குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் இயக்குகிறார். இப்படியான சூழலில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்க வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சூர்யா நானும் ரவுடிதான் திரைப்படத்தில், சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தார். பிறகு, விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்திலும் அவர் நடித்திருந்தார். இந்நிலையில், பீனிக்ஸ் என்னும் படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்தை சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்குகிறார். இதற்கான பட பூஜையும் சமீபத்தில் நடைபெற்று அதற்கான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. விஜய் சேதுபதியின் மகனும் தற்போது திரையுலகிற்கு வர இருப்பது கோலிவுட் வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.





