இப்போதெல்லாம் இயக்குனர்கள் நடிகர்கள் ஆவதும் நடிகர்கள் இயக்குனர் ஆவதும் தமிழ் சினிமாவில் வெகு சாதாரணமாகி விட்டது. நடிகர்கள் இயக்குனர்கள் மட்டுமின்றி காமெடி நடிகர்கள் ஹீரோவாகி விடுகின்றனர். தயாரிப்பாளர்களின் மகன்கள் ஹீரோவாகின்றனர். ஜீவி பிரகாஷ்குமார் விஜய் ஆண்டனி போன்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் ஹீரோவாக உள்ளனர்.
இயக்குனர்கள் நடிகர்களாக மாறிய வரிசையில் கே பாக்யராஜ் பாண்டியராஜன் பார்த்திபன் பாரதிராஜா மணிவண்ணன் சுந்தர் சி சேரன் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்குனராக தமிழ் சினிமாவுக்குள் வந்து பின்பு நடிகராக மாறியவர். பல படங்களில் அழுத்தமான நடிப்பையும் வெளிப்படுத்தியவர்.
தமிழ் சினிமாவில் காக்க காக்க வாரணம் ஆயிரம் விண்ணைத்தாண்டி வருவாயா வேட்டையாடு விளையாடு போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கௌதம் மேனன். பிறகு தயாரிப்பாளராக மாறிய அவர் பல படங்களில் கேரக்டர் ரோலில் நடித்திருக்கிறார். அவர் இயக்கி தயாரித்த துருவ நட்சத்திரம் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் லியோ விடுதலை விடுதலை 2 உள்ளிட்ட படங்களில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு நடிகராக மிக சிறப்பான நடிப்பை தந்திருந்தார். அத்துடன் அவர் இயக்கிய சில படங்களில் அவர் டப்பிங் பேசியிருப்பார். குறிப்பாக சில கேரக்டர்களில் அவரது பின்னணி குரல் இன்னும் அந்த ரோலுக்கு அதிக அழுத்தமும் கொடுத்திருக்கிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய இயக்குனர் கௌதம் மேனன் கூறியதாவது, இனி நான் சினிமாவில் நடிக்க போறது இல்லே. அதுக்காக நான் சினிமாவுக்கு வரலே. இப்போ நடிக்கற ஆர்வமும் பெருசா எனக்கு இல்லே, ஒரு கட்டத்தில் நான் நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஒரு சில படங்களில் இயக்குனர்களுக்காக நடிக்கிறேன்.
வெற்றிமாறன் விடுதலை படத்தில் நடிக்க கூப்பிட்ட போது, அவர் எப்படி படம் எடுக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்ன்னு நடிக்க ஒத்துக்கிட்டேன். ஆனால் நடிக்கும் போதெல்லாம் நடிப்பதற்காக நான் வரலையேன்னு ஒரு எண்ணம் மனசுல ஓடிக்கிட்டே இருக்கும். அதனால் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று இயக்குனர் கௌதம் மேனன் உறுதியாக கூறியிருக்கிறார்.





