கடந்த பல ஆண்டுகளாக ஒரு படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றால் உடனே அந்த படத்தின் வெற்றியை கொண்டாடுகின்றனர். அது மட்டுமின்றி அடுத்து 2ம் பாகமாக அந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது தமிழ் சினிமாவில் வழக்கமாகி வருகிறது. இதுவரை 2ம் பாகமே நடிக்காத சூப்பர் ஸ்டார் ரஜினியே ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்து விட்டார்.
அதே போல் கமல் நடித்த இந்தியன் 2 படம் வெளியானது. தொடர்ந்து இந்தியன் 3 படமும் எடுக்கப்பட்டு ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. விக்ரம் 2 கைதி 2 சர்தார் 2 பிசாசு 2 மூக்குத்தி அம்மன் 2 என பல படங்கள் 2ம் பாகங்களாக வெளிவர இருக்கின்றன. ஏற்கனவே 2ம் பாகங்களாக பாகுபலி பொன்னியின் செல்வன் சந்திரமுகி விடுதலை போன்ற பல படங்கள் வெளியாகி விட்டன.
இந்த வரிசையில் சூர்யா நடித்த சிங்கம் படம் 3 பாகங்கள் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 பாகங்கள் சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை படம் 4 பாகங்களாக இதுவரை வெளியாகி உள்ளன. அந்த வரிசையில் சமீபத்தில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற கருப்பு 2ம் பாகமாக வெளிவருமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த கருப்பு படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கருப்பு 2ம் பாகமாக வெளிவரும் என்று கூறியிருந்தார். ஆனால் படத்தின் நாயகன் நடிகர் சூர்யா தரப்பில் இருந்தோ, படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பில் இருந்தோ எந்த தகவலும் இதுவரை இல்லை.
கருப்பு படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு எடிட்டர் கலைவாணன் ஆகியோருக்கு மஹிந்திரா கார்களை பரிசாக வழங்கினார். வழக்கமான படத்தின் நாயகன் இயக்குனருக்கு தான் கார் பரிசளிப்பது தமிழ் சினிமாவில் வழக்கமாக உள்ளது.
ஆனால் நடிகர் சூர்யா கருப்பு பட இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கு இதுவரை கார் எதுவும் பரிசளிக்கவில்லை. மேலும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கும் கருப்பு படப்பிடிப்பு துவங்கிய சில வாரங்களிலேயே மோதல் போக்கு ஏற்பட்டதாகவும் திரிஷாவுக்கும் ஆர்ஜே பாலாஜிக்கும் புகைச்சல் இருந்ததாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.





