பொதுவாகவே மனிதர்களுக்கு உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அதற்கு உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். எப்போதும் பொலிவான தோற்றத்தில் கட்டுக்கோப்பாக உடல்கட்டுடன் காணப்பட வேண்டும். அதிலும் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தங்களது ஆரோக்கியத்தில் உடல் தோற்றத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள்.
ஏனென்றால் நடிகர் நடிகைகளை பொருத்த வரை சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பது போல அவர்களது தோற்றம் திரையில் சிறப்பாக இருந்தால் மட்டுமே சினிமாவில் நீடித்து நடிக்க முடியும். முகத்தில் தொங்கும் சதையும் வயிற்றில் பிதுங்கும் தொப்பையும் இருந்தால் உச்ச நடிகர்களான ரஜினி கமல் எல்லாம் கூட எப்போதோ நடிப்பை விட்டு வெளியேறி இருப்பார்கள்.
இப்போதும் அவர்கள் ஹீரோவாக நடிக்க காரணம் இன்னும் அவர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை தோற்றத்தை கம்பீரமாக வைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் விஜய் 50 வயதுகளை கடந்தும் இன்னும் மிக இளமையாக காணப்படுகிறார். எப்போதும் அவரது உடல் எடை ஒரே அளவில் சீராக பராமரிக்கப்படுகிறது.
இன்னும் அவரை போல சுறுசுறுப்பாக யாராலும் நடனம் ஆட முடியாது. படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருக்கும் விஜய் கேமரா முன்பு வந்து விட்டால் நடிப்பில் நடனத்தில் தனது விஸ்வரூபம் காட்டுவார் என சக நடிகர் நடிகைகள் பலரும் வியந்து கூறுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு மிகவும் விரும்பி சாப்பிடும் உணவு குறித்து ஜனநாயகன் படத்தில் அவருக்கு மகளாக நடித்துள்ள நடிகை மமீதா பைஜூ சமீபத்தில் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில், விஜய் சார் படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுவார். மிகவும் நிதானமான இயல்பு உடையவராக இருந்தாலும் அவர் மிகவும் இனிமையானவர். நான் அவரிடம் சின்ன சின்ன விஷயங்களை சொன்னாலும் அதை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்.
பிறகு நான் 2 மாதங்கள் கழித்து சந்தித்தாலும் அவர் என்னிடம் அதைப் பற்றி ஞாபகமாக கேட்பார். அவருக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் மதிய வேளையில் சால்மன் மீன் விரும்பி சாப்பிடுவார். லஞ்ச் இடைவேளைக்கு பிறகு நான் எப்போதும் அவரிடம், சார் நீங்கள் இன்று சால்மன் மீன் சாப்பிட்டீர்களா என்று கேட்பேன். அவர் அதற்கு ஒவ்வொரு முறையும் புன்னகையுடன் ஆமாம் என்று பதில் கூறுவார் என்று மமீதா பைஜூ கூறியிருக்கிறார்.





