தமிழ் சினிமாவில் நல்ல படங்களை ரசிகர்களுக்கு தந்தவர் சீனு ராமசாமி. நடிகர் விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க வைத்தவர் சீனு ராமசாமி தான். அவர் இயக்கிய தர்மதுரை, மாமனிதன் படங்கள் விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த நீர்ப்பறவை உதயநிதி நடித்த கண்ணே கலைமானே பரத் நடித்த கூடல் நகர் மற்றும் கோழிப்பண்ணை செல்லதுரை போன்ற படங்களையும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி உள்ளார். திரைப்பட இயக்குனராக மட்டுமின்றி ஒரு கவிஞராகவும் அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சீனு ராமசாமி இயக்கிய படங்களில் சில படங்கள் மட்டுமே பெரிய வரவேற்பை பெற்றன. மற்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனினும் அவரது யதார்த்தமான படங்கள் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை மறுக்க முடியாது.
சமீபத்தில் அந்தோணி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் சீனு ராமசாமி கலந்துக்கொண்டார். அந்த விழாவில் சீனு ராமசாமி பேசியதாவது, இலங்கையில் ஒரு சினிமா படத்தை எடுத்து அந்த படத்தை தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் விநியோகம் செய்வது என்பது பெரிய விஷயம்.
ஒரு நாடு போருக்குப் பிறகு சிதைந்த பிறகு அந்த நாட்டில் வாழ்க்கை என்பது கேள்விக்குறிதான். குண்டு விழுந்த சத்தம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். எல்லா வகையிலும் அடக்கு முறையை சந்தித்து வரும் ஜனங்களின் குரல்தான் இந்த படம். எதையோ ஒன்றை மறைக்க எதையோ ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் வாழ்க்கை என்றாகி விட்டது.
மனித வாழ்க்கையில் எல்லாமே பணமாகி விட்டது. பார்க்க வைக்கப்படும் கேட்க வைக்கப்படும் உலகத்தில் மக்கள் வாழ்கிறார்கள். நம்மை வேடிக்கை பார்க்க வைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட உலகத்தில் இலங்கை தமிழ் மக்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக இந்த படம் காட்சிப்படுத்தி இருப்பதை நான் மனதார வாழ்த்துகிறேன் என்று அந்த விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி மனம் திறந்து பேசியிருக்கிறார்.





