சமீபகாலமாக வெற்றி திரைப்படங்களைக் கொடுப்பதில் திணறிக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு, மிகப்பெரிய வரமாக அமைந்தது மகாராஜா திரைப்படம். ஹீரோ கதாபாத்திரத்தை தாண்டி வில்லன் குணச்சித்திர நடிகர் என பாதை மாறி சென்று கொண்டிருந்த நாயகருக்கு, சரியாக வழி அமைத்துக் கொடுத்ததுடன், ஆச்சரியம் கலந்த வெற்றியையும் கொடுத்தது மகாராஜா.
திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம், இந்திய சினிமா அளவில் பேசப்பட்டது. பின்னர் சீன மொழியில் டப் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கொடியை நாட்டியது. இந்தத் திரைப்படம் கொடுத்த உற்சாகத்துடன், தனது அடுத்தடுத்த பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.
இதில் அவர் மிஷ்கினுடன் இணைந்து பணியாற்றி இருக்கும் ட்ரெயின் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைப்படமாக இதனை இயக்குனர் எடுத்திருக்கிறார். ட்ரெயின் திரைப்படத்தை தயாரித்திருக்கும் கலைப்புலி எஸ் தாணு, இந்த படம் ரசிகர்களை திரையரங்குகளின் இருக்கைக்கு நுனியில் அமர வைக்கும் என்று கூறியிருந்தார்.
அனேகமாக இந்த திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதுபோக மிஷ்கின் இயக்கத்திலேயே எடுக்கப்பட்டிருக்கும் பிசாசு 2 திரைப்படத்திலும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஏஸ் என்னும் திரைப்படத்திலும் அவர் பணியாற்றி இருக்கிறார். இதுபோக அவர் காக்கா முட்டை, கடைசி விவசாயி திரைப்படங்களை கொடுத்த மணிகண்டனுடன் இணைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது திரைப்படமாக இல்லாமல் வெப் சீரிஸ் ஆக எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறார்கள். அதேபோல் இயக்குனர் ஹரி திரைப்படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதனை லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் சேதுபதியின் இந்த திரைப்படங்களின் வரிசையில், புதிய அசைன்மென்ட்டும் இணைந்துள்ளது. அவர், இயக்குனர் ரவிக்குமாருடன் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இன்று நேற்று நாளை, அயலான் திரைப்படங்களை கொடுத்து பலரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இந்த ரவிக்குமார். தற்போது அவருடன் விஜய் சேதுபதி இணைய இருப்பதாக கூறப்படும் திரைப்படத்தை மகாராஜாவை தயாரித்த நிறுவனமே எடுப்பதாக தகவல் கசிந்து உள்ளது.





