“கலக்கப்போவது யாரு”, “குக் வித் கோமாளி” ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்ற காமெடியனாக திகழ்ந்தவர் பாலா. இவரது கவுண்ட்டர் காமெடிகள் பலவும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை. விஜய் தொலைக்காட்சியில் மட்டுமல்லாது சமீப காலமாக பல திரைப்படங்களிலும் பாலா நடித்து வருகிறார்.

பாலா, சமீப காலமாக பல ஏழை குழந்தைகளின் படிப்பு செலவிற்கு உதவி வருகிறார். அதே போல் சமீபத்தில் நடிகர் பாவா லட்சுமணனின் மருத்துவத்திற்காக தன்னால் ஆன பண உதவிகளை செய்தார். இவ்வாறு நெகிழ்ச்சியூட்டும் வகையில் பலருக்கும் உதவி வருகிறார் பாலா.
பாலா மிகப் பெரிய நடிகர் இல்லை என்றாலும், இரவும் பகலுமாக பல பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதில் வரும் பணத்தை வைத்து இல்லாதவர்களுக்கு உதவி வருகிறார். இந்த நிலையில் குக் வித் கோமாளி பாலா, 8000 குடும்பங்களின் உயிரை காக்கும் விதமாக ஒரு பேருதவியை செய்துள்ளார்.
அதாவது ஈரோடு நகருக்கு அருகில் உள்ள ஒரு பழங்குடியினர் கிராமத்தில் மருத்துவ வசதி இல்லாததால் அங்கிருந்த ஒருவர் பாம்பு கடித்து இறந்துவிட்டார். அந்த கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல பல கிலோமீட்டர்கள் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறதாம். ஆதலால் அந்த கிராமத்து மக்கள் மருத்துவ உதவி கிடைக்காமல் மிகவும் அவதிபடுகிறார்களாம்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட பாலா, அந்த கிராமத்திற்கு இரண்டு ஆம்புலன்ஸ்களை வாங்கித் தர வேண்டும் என்று முடிவெடுத்து இரவு பகலாக உழைத்தாராம். ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு போதுமான பணத்தை தேற்றிய பிறகு, அந்த கிராமத்தில் உள்ள மக்களில் ஒருவர், “ஆம்புலன்ஸில் பல தூரம் போவதற்குள்ளேயே எங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுகிறது. ஆதலால் அந்த ஆம்புலன்ஸில் ஒரு அவசர சிகிச்சைக்கான அமைப்பு வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாராம்.
ஆதலால் மீண்டும் பல நாட்கள் இரவு பகலாக உழைத்து அதில் வந்த பணத்தையும் சேர்த்து வைத்து அவர்கள் கேட்டுக்கொண்டபடியே அவசர சிகிச்சைக்கான அமைப்புடன் கூடிய இரண்டு ஆம்புலன்ஸ்களை வாங்கிக்கொடுத்துள்ளாராம். இவ்வாறு 8000 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்திற்கு பாலா செய்த உதவி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





